UAE Tamil Web

நேரடியாக மக்களை சந்தித்து அவர்களது குறைகளைக் கேட்டறியுங்கள் – அரசு அதிகாரிகளை வலியுறுத்திய ஷேக் ஹம்தான்..!

sheik hamdan

துபாயின் பட்டத்து இளவரசரும், நிர்வாகக் கவுன்சிலின் தலைவருமான ஷேக் ஹம்தான் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் (Sheikh Hamdan bin Mohammed bin Rashid Al Maktoum) அவர்களின் தலைமையில் நேற்று அல் கவனீஜ் மைஜ்லிஸ் (AlKhawaneej Majlis) கட்டிடத்தில் நிர்வாக கவுன்சிலின் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

இதில் துபாய் பில்டிங் கோட் (Dubai Building Code) எனப்படும் துபாயில் புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கான வழிமுறைகளை நிர்வாக கவுன்சில் வெளியிட்டிருக்கிறது. இதன்மூலம் குடிமக்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு ஏற்ற சூழலை உருவாக்க முடியும். மேலும், துபாயில் நடத்தப்பட்ட 6 வது சமூக கணக்கெடுப்பின் முடிவுகளையும் ஆராய்ந்த அதிகாரிகள், மக்களின் எண்ணங்களை புரிந்துகொள்ளவும், மேம்பட்ட சேவைகளை வழங்கவும் இது உதவும் என்றனர்.

ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய ஹம்தான்,” குடிமக்கள், வெளிநாட்டவர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் சந்திக்கும் சவால்களை நாம் அறிந்துகொள்ள வேண்டும். உலகளவில் துபாயின் நிர்வாகத்தை மிகச்சிறந்ததாக மாற்ற இதுவே சிறந்த வழி” என்றார்.

இதுகுறித்து ட்விட்டரில் ஹம்தான்,” அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாயின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் எப்போதும் சொல்வது ஒன்றைத்தான். “மக்களிடம் சென்று அவர்களின் தேவைகளைக் கேட்டறியுங்கள்”. குடிமக்கள் மற்றும் அமீரக வாழ் வெளிநாட்டவர்களுக்கான சேவைகளை தொடர்ந்து மேம்படுத்துவதே நமது நோக்கமாகும்” எனத் தெரிவித்துள்ளார்.

“துபாயின் முன்னேற்றம் என்பது மக்களின் நலத்தினை மேம்படுத்துவதையே மையமாகக் கொண்டுள்ளது. துபாயினுடைய வளர்ச்சியின் தூண்களாக இருக்கும் குடிமக்கள், துபாய் வாழ் வெளிநாட்டவர்கள், முதலீட்டாளர்கள் ஆகியோரின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதே நமது நோக்கமாகும்” என ஆலோசனைக் கூட்டத்தில் ஹம்தான் தெரிவித்தார்.

துபாய் பில்டிங் கோட்

கட்டுமான விதிமுறைகள் மற்றும் அதுகுறித்த வழிகாட்டு நெறிமுறைகளை வலியுறுத்துவதே துபாய் பில்டிங் கோட் என வரையறுக்கப்பட்டிருக்கிறது. குறைவான கட்டணம், நிலையான வளர்ச்சி மற்றும் கட்டிட வடிவங்களில் புதிய கண்டுபிடிப்புகளுக்கு முக்கியத்துவம் அளித்தலே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

துபாய் உரிமம் வழங்கும் ஏஜென்சிக்கள் மற்றும் துறைகளில் ஒன் – ஸ்டாப் – ஷாப் (one-stop-shop) என்ற வழிமுறையின்படி உரிமங்களை வழங்க வழிவகை செய்யப்படும். ஆலோசகர்கள், ஒப்பந்ததாரர்கள், டெவலப்பர்கள், முதலீட்டாளார்கள் மற்றும் முதலாளிகளுக்கு இத்திட்டம் உதவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.