கடந்த செப்டம்பர் 28 ஆம் தேதி மன்கூல் பகுதியில் உள்ள அஸ்தர் மருத்துவமனையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து அன்று இரவு 8.27 மணிக்கு சிவில் பாதுகாப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அல் கராமா தீயணைப்பு நிலையத்தில் இருந்து வீரர்கள் அடுத்த 6 நிமிடங்களுக்குள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை 10 நிமிடத்திற்குள் அணைத்தனர்.
பிரசவ அறையில் பரவிய தீ
மின்சார கோளாறு காரணமாக ஏற்பட்ட இந்த தீ, மருத்துவமனையின் அறுவை சிகிச்சை அறைக்குள் பரவியது. அப்போது உள்ளே பிலிப்பைன்ஸ் பெண் ஒருவருக்கு பிரசவம் நடந்துகொண்டிருந்தது.
துரிதமாக செயல்பட்ட தீயணைப்பு வீரர்கள், தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் தாய் மற்றும் குழந்தையை செவிலியர்களின் உதவியுடன் பாதுகாப்பான இடத்திற்கு கொண்டுசென்றனர். இந்த விபத்தினால் யாருக்கும் எவ்வித காயங்களும் ஏற்படவில்லை.
வீட்டிற்குச் சென்ற காவலர்கள்
பிரசவத்தின் போது தீ விபத்தில் சிக்கி தீயணைப்பு வீரர்களால் காப்பற்றப்பட்ட பெண் சிறிது நாளில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டிற்குத் திரும்பினார். ஒருநாள் அந்தப் பெண்ணின் உடல்நலம் குறித்து விசாரிக்கவும் குழந்தையின் ஆரோயக்கியத்தைக் காணவும் அல் காரமா தீயணைப்பு நிலையத்தின் இயக்குனர் சயீத் முகமது அல் மஸ்ரோயி மற்றும் பிற அதிகாரிகளும் பெண்ணின் வீட்டிற்குச் சென்றனர்.
என்னுடைய மற்றும் எனது குழந்தையின் உடல்நலத்தில் அக்கறைவைத்து, என் வீட்டிற்கு வந்த சிவில் பாதுகாப்புத் துறையினருக்கு நன்றி. நான் துபாய் சிவில் பாதுகாப்புத்துறைக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்” என அப்பெண் தெரிவித்தார்.
எங்களுடைய கடமை
“உங்களுடைய பாதுகாப்பே எங்களது முன்னுரிமை” என்னும் திட்டத்தின் அடிப்படையில் தீ விபத்தில் இருந்து காப்பாற்றப்பட்டவர்களை அதிகாரிகள் நேரில் சென்று பார்ப்பது துபாய் சிவில் பாதுகாப்புத்துறையின் வழக்கம்.
“மக்களிடையே மகிழ்ச்சியை மலரச் செல்ல இந்நடவடிக்கை உதவும். பாதுகாப்பான சமூகத்தை உருவாக்க பொதுமக்களுடன் இணைந்து செயல்படுவதே எங்களது நோக்கம்” என மஸ்ரோயி தெரிவித்தார்.