UAE Tamil Web

அமீரக தேசிய தினம்: மக்கள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டிய விதிகளை வெளியிட்ட துபாய்..

dubai

அமீரக தேசிய தினம் நெருங்கியுள்ள நிலையில் தேசிய தின கொண்டாட்டங்களின் போது மக்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டிய சமீபத்திய விதிகள் பற்றி துபாய் ஊடக அலுவலகம் ட்வீட் செய்துள்ளது.

- Advertisment -

அமீரகத்தின் 49-வது தேசிய தினத்தை கொண்டாடும் போது, வீட்டில் குடும்ப உறுப்பினர்கள் ஒன்று கூடுவதை கட்டுப்படுத்துவது உட்பட, கோவிட் -19 தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுமாறு அதிகாரிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக ட்விட்டரில் துபாய் ஊடக அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில், தேசிய தின விடுமுறை காலங்கள் மற்றும் கொண்டாட்டங்களின் போது எமிராட்டிகள் மற்றும் குடியிருப்பாளர்கள் குடும்பம் குடும்பமாக கூடுவதையும், நெரிசலான பகுதிகளுக்கு செல்வதையும் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். மேலும் ஒரு வீட்டில் 20 பேருக்கு மேல் கூட வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முன்னதாக தேசிய தினம், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு போன்ற வரவிருக்கும் நிகழ்வுகளின் போது தொற்றுக்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கண்டிப்பாக கடைப்பிடிக்க, தேசிய அவசர நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்திருந்தது.

பணியிட கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்பட்டு அலங்காரங்கள், கொடிகள் மற்றும் பதாகைகளை வைப்பதற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பொது சுகாதார அதிகாரி ஒருவர் பேசும் போது, ‘ மக்கள் கட்டாயமாக முகக்கவசங்கள் அணிய வேண்டும். போதுமான சமூக இடைவெளியுடன் தனிப்பட்ட சுகாதாரத்தை கடைபிடிக்க வேண்டும்’என்றார். தொற்று காரணமாக இந்த ஆண்டு தேசிய தின கார் அணிவகுப்புகளும் அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.