UAE Tamil Web

துபாய்: பேருந்து மற்றும் டாக்சிக்களுக்கு தனி வழி – போக்குவரத்து நெரிசல் இனி இல்லை..!

bus-lanes-two-

காலித் பின் வாலித் தெருவில் அமைக்கப்பட்டுள்ள பேருந்து மற்றும் டாக்சிக்களுக்கான பிரத்யேக வழி (Lane) வருகின்ற ஜனவரி 21 ஆம் தேதி திறக்கப்படும் என துபாய் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.

4.3 கிலோமீட்டர் நீளமுள்ள இந்த சாலையின் மூன்றாம் கட்ட பணிகள் முடிவடைந்ததையொட்டி இந்த அறிவிப்பு வெளிவந்திருக்கிறது. காலித் பின் அல் வாலித் தெரு மற்றும் மினா தெரு குறுக்குச் சந்திப்பில் இருந்து ஸபீல் தெரு குறுக்குச் சந்திப்பின் முன்பு வரையில் இந்த சிறப்பு வழி இருபுறங்களிலும் அமைக்கப்பட்டுள்ளது.

சிவப்பு நிறத்தில் வர்ணம் பூசப்பட்டுள்ள இந்த வழியில் பாதசாரிகளுக்கான சாலையைக் கடக்கும் இடம், பேருந்து மற்றும் டாக்சி ஓட்டுனர்களுக்கான குளிரூட்டப்பட்ட ஓய்வறை, தெருவிளக்குகள் மற்றும் சாலையோர பூங்காக்கள் ஆகியவையும் இடம்பெற்றுள்ளன.

இந்த சிறப்பு லேன் ஜனவரி 21 ஆம் தேதிமுதல் பயன்பாட்டிற்கு வர இருக்கிறது. அதுவரையிலும் இந்த சாலையை பேருந்து ஓட்டுனர்கள் பயிற்சிக்காக பயன்படுத்துவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

dedicate-lanes
Image Credit: Gulf News

இந்த மூன்றாம் கட்டப் பணிகள் நிறைவடைந்ததன் அடிப்படையில் பேருந்து மற்றும் டாக்சிக்களுக்கான பிரத்யேக வழியின் மொத்த நீளம் 11.6 கிலோமீட்டராக அதிகரித்துள்ளது. இந்த சிறப்பு வழியானது அல் மன்ஹூல், அல் கலீஜ், காலீத் பின் அல் வாலித், அல் குபைபா, நயீஃப், அல் இத்திஹாட் மற்றும் அல் மினா ஆகிய பகுதிகளை இணைக்கிறது.

இதுகுறித்துப் பேசிய RTA வின் தலைமை இயக்குனரும் நிர்வாக இயக்குனர் குழுத்தலைவருமான மட்டார் முகமது அல் தயேர், “பேருந்து மற்றும் டாக்ஸிகளுக்கான பிரத்யேக பாதைகளை உருவாக்குவது வெற்றிகரமான உலகளாவிய நடைமுறையாகும். இது தனியார் வாகனங்களை விட பொது போக்குவரத்து வசதிகளைப் பயன்படுத்த மக்களை ஊக்குவிக்கிறது. வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் உள்ள பல பெருநகரங்களில் இத்திட்டம் கடைபிடிக்கப்படுகிறது” என்றார்.

“பயணங்கள் சரியான நேரத்தில் துவங்கும் சதவீதத்தை அதிகரிப்பது, பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்த பொதுமக்களை ஊக்குவித்தல், டாக்ஸி வருகை நேரத்தை மேம்படுத்துதல், நேரடி மற்றும் மறைமுக செயல்பாட்டு செலவுகள் மற்றும் மாசுபாட்டைக் குறைப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும். வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துதல், பொதுப் போக்குவரத்தை உபயோகிப்பவர்களிடையே மகிழ்ச்சியைப் பரவச் செய்தல் போன்ற ஒருங்கிணைந்த துபாயின் இலக்கை அடைய இத்திட்டம் உதவும்” என அல் தயேர் குறிப்பிட்டார்.

40 பேருந்து வழித்தடங்கள்

“இந்த மூன்றாம் கட்டத்திற்கு முன்னர் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்ட முதலிரண்டு கட்ட பணிகளின் மூலமாக ஒவ்வொரு பேருந்து பயணத்திலும் 5 நிமிட தாமதம் குறைக்கப்படுவது சாத்தியமானது. இது பேருந்துகளின் நேரத்தை 24% மேம்படுத்தியது. போலவே டாக்சி மற்றும் பேருந்து ஓட்டுனர்களையும் திருப்திப்படுத்தியது. தற்போதைய நிலையில் 40 பேருந்து வழித்தடங்கள் இந்த சிறப்பு வழியினைப் பயன்படுத்தும் அதில் 19 காலித் அல் வாலித் வீதி வழியாகச் செல்கிறது” என தயேர் தெரிவித்தார்.

bus-lanes-two-
0 Shares
Share via
Copy link