UAE Tamil Web

உரிமையாளர்களின் வீடுகளிலேயே சிறைபிடிக்கப்பட்ட 5000 க்கும் மேற்பட்ட கார்கள்..!

Cars Impound

இந்தாண்டு துவக்கத்திலிருந்து இதுவரையில் 5,163 கார்கள் ஸ்மார்ட் இன்பவுன்ட் சிஸ்டம் (Smart Impound System) திட்டத்தின் மூலமாக சிறைபிடிக்கப்பட்டுள்ளதாக துபாய் காவல்துறை தெரிவித்திருக்கிறது.

- Advertisment -

என்ன திட்டம்?

பொதுவாக போக்குவரத்து விதிமீறல் நிகழும்போது விதிமீறல் அளவைப் பொறுத்து வாகனவோட்டிக்கு அபராதமோ அல்லது அந்த வாகனமோ பறிமுதல் செய்யப்படும். வாகனவோட்டிக்கு கரும்புள்ளிகள் வழங்கப்படுவதும் உண்டு.

இவ்வாறு கைப்பற்றப்படும் கார்கள் காவல்துறைக்குச் சொந்தமான மைதானங்களில் சிறைக்காலம் முடிவடையும் வரையில் நிறுத்தப்பட்டிருக்கும். ஆனால் இந்த ஸ்மார்ட் இன்பவுன்ட் சிஸ்டம் மூலமாக போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்ட வாகனவோட்டிகள் தங்களது கார்களை தங்களது வீட்டிற்கு வெளியேவோ அல்லது தங்களது குடியிருப்பு வளாகத்தில் உள்ள பார்க்கிங் பகுதியிலோ நிறுத்திக்கொள்ளலாம். கார்களுக்கான சிறைக்காலம் முடிவடையும் வரையில் கார்களை பயன்படுத்தக்கூடாது.

“2018 ஆம் ஆண்டு இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இதன்மூலம் விதிமீறலில் ஈடுபட்டவர்கள் தங்களது வீடுகள் அல்லது வில்லாவிற்கு வெளியே கார்களை நிறுத்திக்கொள்ளலாம்” என துபாய் காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவு இயக்குனர் பிரிகேடியர் சைஃப் முஹைர் அல் மஸ்ரோயி (Saif Muhair Al Mazroui) தெரிவித்தார்.

“இவ்வாறு சிறைபிடிக்கப்பட்ட வாகனத்தில் கண்காணிப்புக்கருவி ஒன்று பொருத்தப்படும். காவல்துறை கட்டுப்பாட்டு அறையில் இருந்து வரைபடத்தில் வாகனத்தின் இருப்பு குறித்து கண்காணிக்கப்படும்” என மஸ்ரோயி தெரிவித்தார்.

இத்திட்டம் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த திட்டத்தில் இணைய 420 திர்ஹம்ஸ் மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படுவதாக எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.