fbpx
UAE Tamil Web

இழந்தது கையை மட்டுமே ; தன்னம்பிக்கையை அல்ல – துபாய் சைக்கிள் பேரணியில் கலந்துகொண்ட மாற்றுத்திறனாளிப் பெண்..!

Shaikha Al Shaiba

துபாய் ஃபிட்னஸ் சேலஞ்ச் நிகழ்வின் ஒருபகுதியாக நேற்று மாபெரும் சைக்கிள் பேரணி நடைபெற்றது. இதில் பஹ்ரைனைச் 37 வயதான பாரா ட்ரையத்லேட் (para-triathlete) வீராங்கனையான ஷேக்கா அல் ஷைபா (Shaikha Al Shaiba) கலந்துகொண்டார்.

பறிபோன கை

தன்னுடைய ஒன்றரை வயதில் வலது கையில் ஏற்பட்ட கட்டி காரணமாக கையை இழந்தார் ஷைபா. இருப்பினும் தன்னம்பிக்கையை இழக்காத ஷைபா நன்றாகப் படித்து தற்போது மனிதவள மேம்பாட்டு அலுவலராகப் பணிபுரிந்துவருகிறார். உடற்பயிற்சிப் பிரியரான இவர் உடல் குறைபாடுகளை மீறி நம்மாலும் சாதிக்க முடியும் என பல்வேறு மக்களின் வழிகாட்டியாய் இருக்கிறார்.

“நான் இந்தப் பேரணியில் கலந்துகொள்ள இங்கே (அமீரகத்திற்கு) வந்தேன். இந்தப் பேரணி நிகழும் காரணத்தை நான் நம்புவதாலும் அதனை வலுப்படுத்த விரும்புவதாலும் இதில் பங்கேற்றேன். இம்மாதிரியான ஒரு உடற்பயிற்சி நிகழ்வினை முன்னின்று நடத்திய துபாயின் பட்டத்து இளவரசரும் துபாய் நிர்வாக கவுன்சிலின் தலைவருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்களுக்கும் ஏனைய அமீரக தலைவர்களுக்கும் நான் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். பேரணி நடைபெற்ற இடத்தின் இருபுறமிருந்தும் எங்களை உற்சாகப்படுத்திய மக்களுக்கு நன்றி” என ஷைபா தெரிவித்தார்.

ஓட்டம், நீச்சல் என கலக்கும் ஷைபா இந்தத் தடைகளை எதிர்கொள்வதன் மூலம் தான் வலிமை பெறுவதாகத் தெரிவித்தார். “ஆரோக்கியமும் உடற்பயிற்சியும் மிக முக்கியம். எதற்காகவும் நான் அதனை விட்டுத்தர மாட்டேன். மாற்றுத் திறனாளிகளால் சாதிக்க முடியாதது என எதுவுமில்லை என இந்த உலகிற்கு நிரூபிக்க நினைத்தேன். தோல்வி நல்லதுதான். அதிலிருந்து அனுபவத்தைப் பெற்று மீண்டும் வெற்றியை நோக்கி நடைபோடலாம். இப்படித்தான் நான் கடந்த முறையை விட மேம்பட்டவளாகவும் வலிமை மிக்கவளாகவும் மாறி வருகிறேன்” என ஷைபா தன்னம்பிக்கையுடன் தெரிவித்தார்.