துபாயின் பட்டத்து இளவரசரும், நிர்வாக சபையின் தலைவருமான ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம், அரிய கரு அறுவை சிகிச்சை ஒன்றை வெற்றிகரமாக மேற்கொண்ட மருத்துவ குழுவை சந்தித்து பாராட்டு தெரிவித்துள்ளார்.
இன்னும் பிறக்காமல் தாயின் கருவிலிருக்கும் குழந்தையின் முதுகெலும்புகளை சரி செய்த, லத்தீஃபா மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவக்குழுவை பிராந்தியத்திலேயே இப்படிப்பட்ட முதல் அறுவை சிகிச்சை செய்ததற்காக ஷேக் ஹம்தான் பாராட்டியுள்ளார்.
இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள ஷேக் ஹம்தான், “இதுபோன்ற எழுச்சியூட்டும் முன்மாதிரியை செய்து காட்டிய மருத்துவக்குழுவை சந்தித்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்த ஊக்கமளிக்கும் குழு தங்கள் ஆரோக்கியமான குழந்தையை வரவேற்கத் தயாராகும் எமிராட்டி குடும்பத்திற்கு நம்பிக்கையையும் நிம்மதியையும் தருவதைக் கண்டு பெருமிதம் கொள்கிறேன் ”என்று ட்வீட் செய்துள்ளார்.
Our expert Emirati medical talents continue to uplift our confidence in our healthcare services. To all our medical & nursing staff, you are extremely valued… Thank you for your tireless efforts. The health and happiness of our society is in your hands. pic.twitter.com/EsRsHJqr70
— Hamdan bin Mohammed (@HamdanMohammed) November 17, 2020
மேலும் ‘நிபுணத்துவம் நிறைந்த எமிராட்டி மருத்துவர்களின் திறமைகள், எங்கள் சுகாதார சேவைகளில் நம்பிக்கையை மேம்படுத்துகின்றன. எங்கள் அனைத்து மருத்துவ மற்றும் நர்சிங் ஊழியர்களே, நீங்கள் மிகவும் மதிக்கப்படுகிறீர்கள். உங்கள் அயராத முயற்சிகளுக்கு நன்றி. சமூகத்தின் ஆரோக்கியமும் மகிழ்ச்சியும் உங்கள் கைகளில் உள்ளது”என்றும் பாராட்டு தெரிவித்துள்ளார்.
Today, I met an Emirati medical team who performed the region’s first-ever corrective fetal surgery on the spine of a 25-week-old fetus in the womb. I am proud to see this inspiring team bring hope and relief to an Emirati family preparing to welcome their healthy child. pic.twitter.com/mPIK8RB8H3
— Hamdan bin Mohammed (@HamdanMohammed) November 17, 2020
முன்னதாக கருவிலிருக்கும் அந்த குழந்தைக்கு மைலோமெனிங்கோசில் எனப்படும் ஒரு வகை முதுகெலும்பு குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டது. இது நடை மற்றும் இயக்கம், குடல் மற்றும் சிறுநீர்ப்பை செயல்பாடு மற்றும் மூளையில் திரவம் குவிதல் உள்ளிட்ட பல பிரச்சனைகளுக்கு வழிவகுக்க கூடியது.
இதனை சரிசெய்ய சமீபத்தில் துபாயில் நடந்த அரபு உலகின் முதல் கருப்பையக கரு அறுவை சிகிச்சையில், தாயின் கருவில் இருக்கும் 700 கிராம் எடையுள்ள குழந்தையின் முதுகெலும்பில் இருந்த குறைபாடு, அது பிறப்பதற்கு முன்பே அறுவை சிகிச்சை மூலம் சரி செய்யப்பட்டது.
மிகவும் நுட்பமான இந்த அறுவை சிகிச்சை 25 வார வயதான கருவில் சுமார் 6 மணி நேரம் செய்யப்பட்டது. இந்த அறுவை சிகிச்சை கருவிலுள்ள அந்த குழந்தைக்கு அறிவாற்றல் செயல்பாடு, குறைந்த மூட்டு செயல்பாடு மற்றும் குறைபாடுகளை மேம்படுத்துவதற்கான வாய்ப்பை வழங்கியுள்ளது. அறுவை சிகிச்சைக்குப் பின் தீவிர சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்ட தாயும், அவரது வயிற்றிலிருந்த கருவும் உடல்நலம் மேம்பட்டனர். மருத்துவ குழுவினர் தொடர்ந்து அவர்கள் இருவரையும் கண்காணித்து வருகின்றனர்.