UAE Tamil Web

“நாங்கள் செய்வதை சொல்கிறோம், சொல்வதை செய்கிறோம்”- பிரமாண்டமான சோலார் பூங்காவின் 3-ம் கட்டத்தை துவக்கி வைத்த துபாய் ஆட்சியாளர்..

dubai

அமீரகத்தின் துணைத் தலைவரும், பிரதமரும் துபாயின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம், துபாய் மின்சாரம் மற்றும் நீர் ஆணையத்தின் (Dewa) கண்டுபிடிப்பு மையத்தை துவக்கி வைத்தார்.

- Advertisment -

மேலும் தூய்மையான ஆற்றலை உருவாக்குவதில் துபாயின் நிலைப்பாட்டை காட்டும் வகையில் அமீரகத்தில் வடிவம் பெற்று வரும் பிரமாண்டமான சோலார் பூங்காவை பார்வையிட்டார். உலகின் மிகப்பெரிய ஒற்றை தள சோலார் பூங்காவான, முகமது பின் ரஷீத் அல் மக்தூம் சோலார் பூங்காவின் 800 மெகாவாட் மூன்றாம் கட்டத்தையும் தொடக்கி வைத்துள்ளார்.

இந்த மிக பெரிய சோலார் பூங்காவானது, 30 ஆண்டுகளில் துபாய் தனது மின்சாரத்தில் 75 சதவீதத்தை தூய்மையான ஆற்றலிலிருந்து பெறுவதை நோக்கமாகக் கொண்டு அமைக்கப்பட்டது.

பின்னர் அவர் உலகின் மிகப்பெரிய செறிவூட்டப்பட்ட சூரிய சக்தி (Concentrated Solar Power) திட்டமான சோலார் பூங்காவின் 15 பில்லியன் திர்ஹம்ஸ் மதிப்பில் உருவாகும் 950 மெகாவாட் நான்காவது கட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்து, அந்த இடத்தையும் பார்வையிட்டார். மொத்த திட்ட செலவின் மதிப்பு 50 பில்லியன் திர்ஹம்ஸ். இது செறிவூட்டப்பட்ட சூரிய சக்தி திட்டத்தில் செய்யப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய முதலீடாகும்.


இது தொடர்பாக ட்வீட் செய்துள்ள ஷேக் முகமது, ‘அடுத்த 30 ஆண்டுகளுக்குள் துபாய்க்கு 75% தூய்மையான ஆற்றலை எட்டுவதே எங்கள் குறிக்கோள், நாங்கள் செய்வதை தான் சொல்கிறோம், சொல்வதை தான் செய்கிறோம்” என்று பதிவிட்டுள்ளார்.

உலகின் மிகப்பெரிய ஒற்றை தள சூரிய ஆற்றல் திட்டமாக அமைக்கப்பட்ட இந்த சோலார் பூங்காவானது, 5,000 மெகாவாட் சுத்தமான மின்சாரம் உற்பத்தி செய்வது மற்றும் 270,000 வீடுகளுக்கு மின்சாரம் வழங்கும் நோக்கத்துடன் செயல்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.