அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாயின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்கள், வாழ்க்கை எனக்கு கற்றுத்தந்தது என்ன? (what life taught me) என்ற தொடரின் மூலம் தனது வாழ்வின் முக்கிய நிகழ்வுகள், மக்களுக்கான அறிவுரைகள் ஆகியவற்றை எடுத்துக்கூறிவருகிறார்.
அதன் நீட்சியாக, நேற்று ஒரு ட்வீட்டை ஆட்சியாளர் வெளியிட்டுள்ளார். அதில், மக்கள் தங்களது வார்த்தைகளில் கவனமாக இருக்கவேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
மனிதன் அவனது வார்த்தைகளினால் பாராட்டப்படுகிறான்.
வார்த்தை என்பது மனிதர்களின் பொதுவான மதமாகும்.
படைப்பு வார்த்தையிலிருந்தே துவங்குகிறது.
சொர்க்கத்தின் கதவுகள் வார்த்தைகளாலேயே திறக்கின்றன.
மனத்தடைகளை தகர்க்கும் வல்லமை வார்த்தைகளுக்கு உண்டு.
அழகிய வார்த்தைகளால் மனம் புத்துயிர் பெறுகிறது.
ஆன்மாவிற்கும் உற்சாகத்திற்கும் பொறுப்பான வார்த்தைகள் அவசியமாகின்றன.
நம்முடைய பார்வை, நடத்தை மற்றும் மதிப்பிற்கு வார்த்தைகளே பொறுப்பாகின்றன.
நம் தாயகத்தின் பெருமையை வார்த்தைகள் பறைசாற்றுகின்றன.
நமது தாயகத்தை மேலும் கவுரப்படுத்துவோம். – என அந்த ட்வீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
#علمتني_الحياة أهمية الكلمة..شرف الرجل في كلمته..دين الإنسان في كلمة..بداية الخلق كانت بكلمة..أبواب السماء تفتح بكلمات..أقفال القلوب تكسر بكلمات..العقول ترقى بالكلمة الجميلة..النفوس والهمم تشحذ بكلمة صادقة..كلماتنا تمثل أخلاقنا وقيمنا ومروءتنا..كلماتنا تمثل أوطاننا..لنشرف أوطاننا
— HH Sheikh Mohammed (@HHShkMohd) October 9, 2020
அமீரகம் எல்லோருக்குமானது
சமீபத்தில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பு ஒன்றில் அரபு தேசங்களில் வசிக்கும் இளைஞர்களில் 77 சதவீதமானோர் தங்களது நாடுகளில் இருந்து வெளியேற விரும்புவதாகத் தெரிவித்துள்ளனர். இந்த இடப்பெயர்வுக்கு தங்களது நாட்டு அரசு செய்யும் ஊழல்களே காரணம் எனவும் இளைஞர்கள் கருத்துக்கணிப்பின் வாயிலாகத் தெரிவித்திருக்கிறார்கள்.
இதற்கு ட்விட்டர் மூலம் தனது கருத்தினைப் பதிவுசெய்த, ஷேக் முகமது,” அரசு இயந்திரம் ஊழல் மிக்கதாக இருந்தால், பாதுகாப்பு சீர்குலையும். நாடு வீழ்ச்சியை சந்திக்கும். மக்கள் நாட்டைவிட்டு வெளியேறுவார்கள். இறைவனுக்கு முன்னால் ஒவ்வொரு அதிகாரியும் அதற்கு பதில்கூற வேண்டியிருக்கும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.
அரபு தேசங்களில் இருந்து வெளியேறும் எண்ணமுள்ள இளைஞர்களில் 46 சதவிகிதத்தினர், அமீரகத்திற்கு வர விருப்பம் தெரிவித்திருக்கின்றனர். அதனைத் தொடர்ந்து பட்டியலில் அமெரிக்கா, கனடா, பிரிட்டன் மற்றும் ஜெர்மனி ஆகியவை இடம்பெற்றுள்ளன.
“நாங்கள் அவர்களுக்குத் தெரிவிப்பது ஒன்றைத்தான்: அமீரகம் எல்லோருக்குமான நிலம். நாங்கள் வெற்றிகரமான முன்மாதிரியை உருவாக்கிவருகிறோம். அமீரகத்தின் கதவுகள் உங்களுக்காக எப்போதும் திறந்தே இருக்கும்” என ட்விட்டரில் பதிலளித்துள்ளார் ஷேக் முகமது.