UAE Tamil Web

சிரியாவை சேர்ந்த கர்ப்பிணிக்கு அரை மணி நேரத்தில் கிடைத்த சிறப்பு நுழைவு விசா.! அபுதாபி மருத்துவமனையில் நடந்த பிரசவம்..

dubai

துபாய் ஏர்போர்ட்டில் விமானத்திற்காக காத்திருந்த சிரியாவை சேர்ந்த கர்ப்பிணி ஒருவருக்கு திடீரென்று பிரசவ வலி ஏற்பட்டது. அமீரக அதிகாரிகளின் துரித நடவடிக்கையால் அவர் ஒன்றல்ல, இரண்டல்ல மூன்று குழந்தைகளை பத்திரமாக பெற்றெடுத்துள்ளார்.

- Advertisment -

இமான் அல் அக்லா என்ற 29 வயதான பெண், ஓமானில் இருந்து லெபனானுக்கு பறக்கவிருந்த டிரான்சிஸ்ட் பாசஞ்சர் (transit passenger) ஆவார். பயணத்தின் இடையில் ஸ்டாப்ஓவருக்காக இமான் அல் அக்லா துபாய் வந்த போது, பலவீனமாகவும் மிகவும் களைப்பாகவும் காணப்பட்டுள்ளார். மேலும் இமான் எந்த நேரத்திலும் பிரசவிக்கலாம் என்ற நெருக்கடி நிலை ஏற்பட்டது.

இக்கட்டான சூழலை உணர்ந்த ரெசிடென்சி மற்றும் வெளிநாட்டினர் விவகாரங்களுக்கான பொது இயக்குநரகத்தின் இயக்குனர் ஜெனரல் அல் முகமது அஹ்மத் அல் மர்ரி, இமான் அல் அக்லாவிற்கு சிறப்பு நுழைவு விசா வழங்க முயற்சியை முன்னெடுத்தார்.

அடுத்த அரை மணி நேரத்திற்குள்ளாகவே இமான் அல் அக்லாவிற்கு சிறப்பு நுழைவு விசா அளிக்கப்பட்டது. இதனை அடுத்து கர்ப்பிணியான அல் அக்லா உடனடியாக அவரது சகோதரர்கள் வசிக்கும் அபுதாபியில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு அவருக்கு ஆரோக்கியமான 2 பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது. அமீரக அதிகாரிகளின் விரைவான நடவடிக்கைக்கு நன்றி தெரிவித்து கொண்டுள்ள அக்லா, அமீரகத்தில் தங்கி வாழும் வகையில் தனது விசா நிலையை மாற்றுவதற்கான செயல்முறையைத் தொடங்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அமீரகத்தில் வாழ எவரும் கனவு காண்பார்கள் என்றும் அவர் உற்சாகத்துடன் கூறியுள்ளார்.