அமீரகத்தைச் சேர்ந்த ஹீஷம் அகமது சலா அகமது என்னும் இளைஞர், தான் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டதைப் பற்றி சுவாரஸ்யமான கட்டுரை ஒன்றினை எழுதியுள்ளார். அதில், கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதால் தனக்குக் கிடைக்கும் சலுகைகள் குறித்து அகமது குறிப்பிட்டுள்ளார். இனி, அவர் மொழியிலேயே அவர் கூறுவதைக் கேளுங்கள்.
கடந்த மாதம் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ள தயாரானபோது மருத்துவர்கள் என்னிடம் அளித்த சிறு குறிப்பின் தலைப்பு தடுப்பூசித் திட்டத்தின் பயணம் (The journey of vaccination) என்பதுதான்.
இந்த பயணத்தின் பல்வேறு படிநிலைகளைக் கடந்து தற்போது அதன் இறுதிக் கட்டத்தையும் எட்டிவிட்டேன். இதனால் எனக்கு என்ன பரிசு கிடைத்தது என்கிறீர்களா? கிடைத்தது. கொரோனா நோய்த் தொற்று உள்ளவர்களைக் கண்காணிக்கும் ALHOSN அப்ளிகேசனின் என்னுடைய பக்கத்தில் எனக்கு E ஐகான் கிடைத்திருக்கிறது.
டிசம்பர் 14, 2020 அன்று துபாய் பார்க்ஸ் & ரிசார்ட் பகுதியில் உள்ள எமிரேட்ஸ் கள மருத்துவமனைக்குச் சென்று நான் கொரோனா தடுப்பூசியின் (சினோபார்ம்) முதல் டோசை எடுத்துக்கொண்டேன். அடுத்த 21 நாட்கள் கழித்து இரண்டாவது டோசைப் பெற்றுக்கொண்டேன். அந்த நாளில் இருந்து சரியாக 28 நாட்கள் கழித்து ALHOSN அப்ளிகேஷனின் என்னுடைய பக்கத்தில் E ஐகான் தோன்றியது.

E ஐகானா? எப்படியென்றால்?
நான் கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் எடுத்துக்கொண்டேன் என்பதனை உறுதி செய்ய அரசு அளித்திருக்கும் அங்கீகாரம் இது. கொரோனா தடுப்பூசி ஆய்வில் தன்னார்வலர்களாக உள்ளவர்களுக்கு வழங்கப்படும் கோல்டன் ஸ்டார் போன்றது இந்த E ஐகான்.
இது ஏன் முக்கியம்?
பெடரல் ஊழியர்கள் ஒவ்வொரு 7 நாட்களுக்கு ஒருமுறையும் கொரோனா பரிசோதனை எடுத்துகொள்ளவேண்டும் என சமீபத்தில் அரசு தெரிவித்திருந்தது. ஆனால், நீங்கள் E ஐகான் பெற்றவராக இருந்தால் உங்களுக்கு அந்த நடைமுறையில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.
அதேபோல, பிற எமிரேட்களில் இருந்து அபுதாபிக்குள் நுழைவோர் கட்டாயம் PCR அல்லது DPI பரிசோதனையை மேற்கொண்டிருக்க வேண்டும். E ஐகான் பெற்றவர்களுக்கு இதிலும் விலக்கு உண்டு.
தொடர்புள்ள பதிவு: கொரோனா தடுப்பூசி போட்டுகொண்டவர்களுக்கு அறிவிக்கப்பட்ட தாறுமாறான இலவசங்கள் மற்றும் சலுகைகள்.
முன்னெச்செரிக்கை முக்கியம்
ஒருவர் கொரோனா தடுப்பூசி எடுத்துகொண்டால் அவர் பாதுகாப்பாக உணர்வார். அதே நேரத்தில் நீங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்கவேண்டும். நான் முகக்கவசம் அணிகிறேன். கைகளை சீரான இடைவெளியில் சுத்தமாக கழுவுகிறேன். சமூக இடைவெளியைக் கடைபிடிக்கிறேன். இதன்மூலம் கொரோனாவிற்கு எதிரான அமீரக அரசின் நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக நிற்கிறேன். நீங்களும் இதைச் செய்வீர்களா?
கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் குறித்து அறிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.