UAE Tamil Web

துபாய் விமான நிலையத்தில் தாயகம் செல்ல அனுமதி மறுக்கப்பட்ட இந்தியர்கள் – புதிய வழிமுறையால் ஏற்பட்ட குழப்பம்..!

dubai-airport_

நேற்று, துபாயில் இருந்து மும்பை சென்ற ஏர் இந்தியா AI1948 விமானத்தினைப் பிடிக்க அவசர அவசரமாக விமான நிலையத்திற்கு வந்த ஆகாஷ் சதுர்வேதி மற்றும் அவரது வயதான பெற்றோர்களால் தங்களது பயணத்தினைத் தொடர முடியாமல் போனது. காலை 11.30 மணி விமானத்திற்கு 9 மணிக்கெல்லாம் ஆகாஷின் குடும்பம் விமான நிலையம் சென்றுவிட்டது. இருப்பினும், ஏர் சுவிதா போர்டலில் விண்ணப்பிக்கவும், சுய உறுதிமொழி சான்றிதழை எடுத்துவரவும் இந்தக் குடும்பம் தவறியிருக்கிறது.

இதன் காரணமாக பயணத்தினை மேற்கொள்ள இந்தக் குடும்பத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. ஊடகத்தில் பணிபுரிந்துவரும் ஆகாஷ் மற்றும் அவரது பெற்றோர் விசிட்டிங் விசாவில் அமீரகத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டிற்கு வந்திருக்கிறார்கள்.

இணையதளம் செய்த குளறுபடி

ஏர் சுவிதா போர்டலில் பதிவு செய்ய, ஆகாஷ் முயன்றிருக்கிறார். ஆனால் இணையதளம் சரிவர வேலை செய்யாததால் அவரால் பதிவு செய்ய முடியாமல் போயிருக்கிறது. விமான நிறுவன அதிகாரியிடம் சென்று, நடந்தவற்றைக் கூற, அவர் மற்றொரு ஊழியரிடத்தில் ஆகாஷை அழைத்துச் சென்றிருக்கிறார். அங்கு, போர்டலில் பதிவு செய்ய ஒரு நபருக்கு 35 திர்ஹம்ஸ் வசூலிக்கப்பட்டிருக்கிறது.

அப்போதும் இணையதளம் ஏற்படுத்திய சிக்கல் காரணமாக பதிவு செய்யமுடியாமல் போயிருக்கிறது. ஆகாஷ் மட்டுமல்லாமல் அவரைப் போன்றே மேலும் சில இந்தியர்களும் இந்த சிக்கலை சந்தித்திருக்கிறார்கள்.

இதுகுறித்துப் பேசிய ஏர் இந்தியா அதிகாரி ஒருவர், இந்திய அரசு வெளியிட்டுள்ள சமீபத்திய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பிப்ரவரி 22 ஆம் தேதிமுதல் நடைமுறைக்கு வந்திருக்கின்றன. அதன்படி போதிய பயண ஆவணங்கள் இல்லாத நபர்கள் பயணத்தைத் தொடர அனுமதிக்க முடியாது. பயணிகள் சுய உறுதிமொழி விண்ணப்பம் மற்றும் PCR பரிசோதனை முடிவுகளின் தலா இரண்டு நகல்களை கையில் வைத்திருக்க வேண்டும்” என்றார்.

மேலும், பயணத்திற்கு முன்பே, விமான நிலையத்தில் கேட்கப்படும் ஆவணங்கள் எவை? என பயணிகளுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படுவதாக அதிகாரி தெரிவித்தார். மேலும், ஏர் சுவிதா போர்டலில் பதிவு செய்யாத பயணிகளை ஏற்றிச் சென்றால் அதிகப்படியான அபராதங்களுக்கு விமான நிறுவனம் உள்ளாகும் எனவும் அந்த அதிகாரி குறிப்பிட்டார்.

தனக்கு அதுபோன்ற குறுஞ்செய்தி வரவில்லை எனவும் ஏர் இந்தியாவின் விளம்பர செய்திகள் தான் வந்தன எனவும் ஆகாஷ் தெரிவித்தார். மேலும் அவர் பேசுகையில்,” இப்போது நாங்கள் மீண்டும் விமான டிக்கெட்டைப் பெற்று பயணத்தைத் தொடர வேண்டும். எங்களால் இதனை சமாளிக்க முடியும். ஆனால், கஷ்டத்தில் நாடு திரும்புபவர்கள், கையில் பணமில்லாதவர்கள், படிக்காதவர்களின் நிலைமை என்ன? அவர்களால் எப்படி பயணத்தைத் தொடர முடியும்? இப்படி வெளிநாடுகளில் அப்பாவி இந்திய மக்கள் சிக்கிகொண்டால் என்ன செய்வது? ஆகவே, அரசு இந்த நடைமுறையை எளிமைப்படுத்தவேண்டும்” என்றார்.

dubai-airport_
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap