UAE Tamil Web

தந்தையின் இறுதிச் சடங்கிற்கு செல்ல முடியாமல் துபாயில் தவித்த இந்தியர் வெளியிட்ட உருக்கமான ட்விட்டர் பதிவு: உடனடியாக கிடைத்த உதவி..!

2020_dubai_international_airport

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் ஹரி சுகுமாரன். அமெரிக்காவில் தற்போது வசித்துவரும் இவர், தனது தந்தையின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக அமெரிக்காவிலிருந்து துபாய் வழியாக இந்தியா திரும்ப திட்டமிட்டுள்ளார். அமெரிக்காவிலிருந்து துபாய் வந்தடைந்த இவரால் தாயகத்திற்குச் செல்ல முடியாமல் போயிருக்கிறது.

- Advertisment -

வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் தாயகம் வந்துசெல்ல உதவும் வகையில் அளிக்கப்படும் OCI (Overseas Citizen of India) கார்டை தனது பழைய பாஸ்போர்ட்டுடன் ஹரி இணைத்திருக்கிறார். புது பாஸ்போர்ட்டுடன் வந்ததால், அவரால் இந்தியாவிற்கு தனது பயணத்தினைத் தொடரமுடியவில்லை.

அமெரிக்க பாஸ்போர்ட் வைத்திருந்ததால், ஹரிக்கு வருகையின்போது அமீரக விசா வழங்கப்பட்டிருக்கிறது. ஆனாலும் OCI கார்டினால் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. இதனையடுத்து மாநிலங்களுக்கான வெளியுறவுத்துறை அமைச்சர் வி.முரளிதரன் அவர்களிடம் ட்விட்டர் வாயிலாக உதவிகோரினார் ஹரி.

இதனையறிந்த அமைச்சரும், துபாயில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தை தொடர்புகொள்ளும்படி அறிவுறுத்தியுள்ளார். துணைத் தூதராக அலுவலரான அமித் ராகவ் உடனடியாக ஹரியைத் தொடர்புகொண்டு, துணைத் தூதரகம் அல்லது பிரவசி கேந்திரா சஹாதியா கேந்திரா (PBSK) அமைப்பிடம் உதவிகோருமாறு வழிகாட்டியுள்ளார்.

துரித உதவி

துணைத் தூதரகத்தின் பத்திரிகை, செய்தி மற்றும் கலாச்சார அதிகாரி சித்தார்த்தா குமார் இதுகுறித்துப் பேசுகையில்,” துபாய் விமான நிலையத்தில் தவித்த ஹரியை உடனடியாக தொடர்புகொண்டு, துணைத் தூதரகத்திற்கு வரும்படி தெரிவித்தோம். அவரது சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு அவருக்கு இந்திய நுழைவு அனுமதியை வழங்கினோம். இதன்மூலம், அவரால் குறித்த நேரத்தில் இந்தியாவிற்குப் பயணிக்க முடிந்தது” என்றார்.

நன்றிக்கடன்

துக்ககரமான சூழ்நிலையில், திக்கற்று நின்ற தனக்கு துபாயில் உள்ள துணைத் தூதரக அதிகாரிகள் உறுதுணையாக நின்று, எனது தந்தையின் முகத்தை இறுதியாக பார்ப்பதற்கு உதவி செய்துள்ளனர். இதற்கு எப்படி நன்றி தெரிவிப்பது என்றே தெரியவில்லை என ஹரி தெரிவித்திருக்கிறார். பல்வேறு ட்விட்டர் பதிவுகள் மூலமாக தனக்கு கிடைத்த உதவி குறித்து நன்றியுடன் பதிவிட்டிருக்கிறார் ஹரி.

உதவி செய்வதே நோக்கம்

அமீரக வாழ் இந்தியர்கள் மட்டுமல்லாமல் அமீரகம் வழியாக பயணிக்கும் ஒவ்வொரு இந்தியருக்கும் துணை நிற்பதே தங்களது நோக்கம் என துணைத் தூதரகம் தெரிவித்திருக்கிறது. கடந்த மாதம், சவூதியிலிருந்து துபாய் வழியாக இந்தியா சென்ற பெண்மணி, தனது கனெக்டிங் விமானத்தை துபாயில் தவறவிட்டார்.

அப்போது, இலவசமாக அப்பெண்மணியின் விமான டிக்கெட்டிற்கான கட்டணத்தையும், இன்டெர் டெர்மினல் பேக்கஜ் கட்டணத்தையும் துணைத் தூதரகமே ஏற்றது. அதேபோல, பணமில்லாமல் தவித்த அப்பெண்மணிக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் இலவசமாக உணவளித்தது குறிப்பிடத்தக்கது.

தனது தந்தையின் இறுதிச் சடங்கில் பங்கேற்க முடியாமல் தவித்த ஹரிக்கு உதவிசெய்த துணைத் தூதரகத்திற்கு இந்தியர்கள் நன்றியும் வாழ்த்தும் தெரிவித்து வருகின்றனர்.