UAE Tamil Web

அமீரகத்தில் கொண்டாடப்பட்ட 72 வது இந்திய குடியரசு தின விழா: வீடியோ..!

Republic Day Dubai

துபாயில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் இந்தியாவின் 72 வது குடியரசு தினம் இன்று கொண்டாடப்பட்டது. கொரோனா காரணமாக குறிப்பிட்ட துணைத்தூதரக அதிகாரிகள் மட்டுமே இந்த விழாவில் கலந்துகொண்டனர்.

- Advertisment -

துணைத் தூதர் டாக்டர். அமன் பூரி மூவர்ணக் கொடியை ஏற்றியதோடு, இந்திய குடியரசுத்தலைவரின் உரையை வாசித்தார். வேளான் மக்கள், ராணுவ வீரர்கள் மற்றும் விஞ்ஞானிகளின் கடின உழைப்பை இந்திய குடியரசுத் தலைவரான திரு.ராம்நாத் கோவிந்த் தனது உரையின் மூலம் நினைவுகூர்ந்தார்.

இப்படியான பெருநோய் காலத்திலும் இந்தியர்கள் ஒற்றுமையுடனும் வலிமையுடனும் இருப்பதற்கு நமது அரசியலமைப்புச் சட்டமும் ஒரு காரணம் என குடியரசுத் தலைவர் குறிப்பிட்டார். அதேபோல, உலகெங்கிலும் பல மருந்துப் பொருட்களை இந்தியா ஏற்றுமதி செய்வதால் இந்தியா, “உலகத்தின் மருந்தகத்துறையாக” செயல்படுவதாக குடியரசுத்தலைவர் குறிப்பிட்டார்.

துபாயில் நடைபெற்ற இந்த விழாவில் இந்தியாவின் மாநிலங்களுக்கான சமூக நீதி மற்றும் மேம்பாட்டு அமைச்சர் திரு. ராம் தாஸ் அதாலே கலந்துகொண்டார்.

பள்ளிக் கொண்டாட்டம்

இதனையடுத்து, இந்தியன் ஸ்கூலில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் துணைத் தூதர் கலந்துகொண்டார். அங்கே இந்தியாவின் தேசியக் கொடியை ஏற்றிவைத்த துணைத்தூதர், குடியரசு தின அணிவகுப்பைப் பார்வையிட்டார்.

இந்த விழாவில் JSS தனியார் பள்ளி உள்ளிட்ட 24 பள்ளிகள் கலந்துகொண்டன. இதில் JSS பள்ளியின் மழலையர் வகுப்பு மாணவர்கள் Sanskriti-A Plethora of Cultures (அதீத கலாச்சார வளம்) என்னும் தலைப்பில் கலைநிகழ்ச்சி ஒன்றினை நடத்திக்காட்டி அசத்தினர். இப்பள்ளியின் அராபிக் பிரிவு மாணவர்கள், தங்களது தேசப்பற்றை வெளிப்படுத்தும் விதமாக இந்தோ-அரபு கலாச்சார போட்டிகளை நடத்தினர்.