துபாய்: அமீரகத்தின் தேசிய மரமான காஃப் (Ghaf) மரங்களை கணக்கெடுக்கும் பணிகள் துபாயில் நடைபெற்று வருகின்றன. இம்மரங்களை யாரும் சேதப்படுத்தினால், மரத்தின் வயது, சேதத்தின் அளவு ஆகியவற்றின் அடிப்படையில் 1000 முதல் 50,000 திர்ஹம்ஸ் வரையில் அபராதம் விதிக்கப்படும் என அரசு பொதுமக்களை எச்சரித்துள்ளது.
கடந்த 2017 ஆம் ஆண்டு துபாய் நகராட்சி, எமிரேட் முழுவதிலும் உள்ள 177 பகுதிகளில் வளர்ந்திருக்கும் அல் காஃப் மரங்களில் நம்பர் பிளேட் பொருத்தும் பணியைத் துவங்கியது. இந்நிலையில் இந்த திட்டமானது கடந்த புதன்கிழமையோடு நிறைவடைந்தது. இத்திட்டத்தின் முதற்பகுதியில் நகர்ப்புறங்களில் உள்ள 10,000 மரங்களை இலக்காக நகராட்சி எடுத்துக்கொண்டது. இத்திட்டமானது நகர்ப்புறங்களில் தாமாகவே வளர்ந்திருக்கும் மரங்களைக் கணக்கெடுக்கும் பணியின் ஒரு பகுதியேயாகும். துபாய் முழுவதிலும் உள்ள 24,000 மரங்களில் உலோக நம்பர் பிளேட் பொருத்தும் பணிகள் நிறைவடைந்திருக்கின்றன. இவற்றில் பாதியளவு 50 வருடங்கள் பழமையானவை என்பது குறிப்பிடத்தக்கது.
#DubaiMunicipality completed ‘Al Ghaf’ tree numbering in 177 areas since the project launched in 2017, which targeted in its first phase the total of 10,000 perennial trees in the urban area. pic.twitter.com/93Gu95Uuxd
— بلدية دبي | Dubai Municipality (@DMunicipality) February 10, 2021
இந்த நம்பர் பிளேட்டில்,” இந்த மரம் சட்டத்தின் மூலம் பாதுகாக்கப்பட்டு வருகிறது. பொது பூங்காக்கள் மற்றும் தோட்டக் கலைத்துறையிடம் ஒப்புதல் பெறாமல் இதனை சேதப்படுத்தினாலோ, வெட்டினாலோ, வேறு இடத்திற்கு மாற்றவோ அனுமதியில்லை” என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. ஸபீல் 1 ஏரியாவில் மசூதி ஒன்றிற்கு அருகில் உள்ள 100 வருட பழைமையான மரத்தில் முதல் நம்பர் பிளேட் பொருத்தப்பட்டது.
இத்திட்டத்தின் இரண்டாம் பகுதியில் இந்த மரங்களில் GPS வசதியுடன் கூடிய எலெக்ட்ரானிக் சிப் ஒன்று பொருத்தப்பட இருப்பதாக நகராட்சி தெரிவித்திருக்கிறது. இதன்மூலம் மரங்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் கண்காணிக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நகர்ப்புறங்களில் உள்ள மரங்களில் நம்பர் பிளேட் பொருத்தும் பணி நிறைவடைந்தவுடன் வனப்பகுதிகளில் உள்ள மரங்களுக்கு நம்பர் பிளேட் பொருத்தும் பணிகள் துவங்கும் என நகராட்சி தெரிவித்திருக்கிறது.