UAE Tamil Web

ஈத் அல் பித்ர் : 5 பேருக்கு மேல் ஓரிடத்தில் கூடினால் 50,000 திர்ஹம்ஸ் அபராதம் – அமீரக காவல்துறை எச்சரிக்கை..!

eid-al-fitr,-uae,-public-holdiays,-coronavirus,-covid19,-ramadan

ஈத் அல் பித்ர் பண்டிகை வரும் வியாழக்கிழமை அன்று கொண்டாடப்படும் என அமீரக பிறைபார்க்கும் கமிட்டி நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்நிலையில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மக்கள் பின்பற்றவேண்டும் எனவும் தவறுபவர்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படும் எனவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

துபாய்

துபாயைப் பொருத்தவரையில் பொது இடங்களில் 5 நபர்களுக்கும் அதிகமானோர் நிகழ்ச்சியில் பங்கேற்கக்கூடாது. அவ்வாறு செய்தால் 50,000 திர்ஹம்ஸ் அபராதம் விதிக்கப்படுவதோடு, ஒவ்வொருவருக்கும் தலா 15,000 திர்ஹம்ஸ் அபராதமும் விதிக்கப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது.

ஒரே குடும்பத்தைச் சார்ந்திடாத 3 நபர்களுக்கு மேல் ஒரே காரில் பயணித்தால் அவர்களுக்கும் அபராதமானது விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்துப் பேசிய துபாய் பொதுப் போக்குவரத்துத்துறை இயக்குனர் பிரிகேடியர் ஜெனரல் சைஃப் முஹைர் சயீத் அல் மஸ்ரோய்,” கொரோனா விதிமீறல்களைக் கண்காணிக்க கூடுதல் ரோந்துத்துறை அமைக்கப்பட்டுள்ளது. துபாய் முழுவதும் ஒரு ஷிப்டுக்கு 3000 க்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். கூடுதலாக 700 தன்னார்வலர்களும் இப்பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். கொரோனா விதிமீறலில் யாரேனும் ஈடுபடுகிறார்களா? என்பதை இந்த அதிகாரிகள் கண்காணிப்பார்கள்” எனத் தெரிவித்தார்.

அவசரகால தயார்நிலைக்காக 111 க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ், 72 தீயணைப்பு வாகனங்கள் பணியில் ஈடுபடுத்த காத்திருக்கின்றன எனவும் துபாயில் உள்ள 9 கடற்கரையில் 24 காவல்துறை ரோந்து மற்றும் 18 இருசக்கர வாகனங்கள் பாதுகாப்புப் பணியினை மேற்கொள்ளும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

அபுதாபி

அபுதாபியில் கூட்டமான நிகழ்வுகள் நடப்பின் 10,000 திர்ஹம்ஸ் அபராதமும் அதில் கலந்துகொண்டவர்களுக்கு தலா 5,000 திர்ஹம்ஸ் அபராதமும் விதிக்கப்படும் என அபுதாபி காவல்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

அதேபோல, முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைக் கடைபிடித்தல் போன்ற கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் எனவும் காவல்துறை வலியுறுத்தியுள்ளது.