UAE Tamil Web

சர்வதேச பாதுகாப்பு தரங்களை கொண்ட பாஸ்போர்ட், எமிரேட்ஸ் ஐடிக்கான புதிய டிசைனுக்கு அமீரக அமைச்சரவை ஒப்புதல்.!

dubai

எமிராட்டி பாஸ்போர்ட் மற்றும் எமிரேட்ஸ் ஐடியின் புதிய வடிவமைப்புக்கு அமீரக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதனை அடுத்து தற்போதைய அனைத்து அமீரக பாஸ்போர்ட் மற்றும் அடையாள அட்டைகள் படிப்படியாக மாற்றப்படும்.

அமைச்சரவையால் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள “புதிய தலைமுறை வடிவமைப்பு(new generation design)” கூடுதல் பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது. இதன் மூலம் அமீரக குடிமக்கள் மிகவும் பாதுகாப்பான பாஸ்போர்ட் மற்றும் தேசிய அடையாள அட்டைகளை பெறுவார்கள்.

மேற்கண்ட இரு ஆவணங்களின் பாதுகாப்பு அம்சங்களை மேலும் உறுதிப்படுத்த கூடுதல் டிஜிட்டல் குறியீடுகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இது மிக உயர்ந்த சர்வதேச பாதுகாப்பு தரங்களை கொண்டதாக இருக்கும். பாஸ்போர்ட்களில் மறைகுறியாக்கப்பட்ட குறியீடுகள்(encrypted codes) மிக முக்கியமான பாதுகாப்பு அம்சமாக கருதப்படுகிறது.

இது மக்கள் பயணிக்கும்போது பாஸ்போர்ட்களை சரிபார்க்க உதவுகிறது. மேலும் பாஸ்போர்ட் குறியீட்டின் இந்த வகை டிஜிட்டல் மேம்படுத்தலை செயல்படுத்தும் முதல் அரபு நாடாக அமீரகம் திகழ்கிறது. இது அமீரக பாஸ்போர்ட்களின் பாதுகாப்பு நம்பிக்கையை மற்ற நாடுகளிடையே மேம்படுத்துகிறது. மேம்பட்ட பாஸ்போர்ட் பாதுகாப்பு அம்சங்கள் உலகெங்கிலும் உள்ள விமான நிலையங்கள் மற்றும் சர்வதேச துறைமுகங்கள் வழியாக செல்லும் போது குடிமக்களுக்கு உதவுகின்றன.

நினைவு நாள் மற்றும் அமீரக தேசிய தினத்தை முன்னிட்டு இன்று நடைபெற்ற அமீரக அமைச்சரவை கூட்டத்திற்கு, அமீரகத்தின் துணைத் தலைவரும், பிரதமரும், துபாய் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் தலைமை தாங்கினார்.

இந்த அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட சில முக்கிய முடிவுகள் குறித்த அறிவிப்பை ஷேக் முகமது தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவை பின்வருமாறு:

  • சைபர் பாதுகாப்பு கவுன்சில் அமைக்கப்படும். இந்த கவுன்சில் அனைத்து துறைகளிலும் இணைய பாதுகாப்பை மேம்படுத்த கொள்கைகள் மற்றும் ஒழுங்குமுறைகளை வகுக்கும்.
  • சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கான பொதுக் கொள்கை ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இது காற்றின் தரம், விவசாய உற்பத்தி மற்றும் கழிவு மேலாண்மை ஆகியவற்றை உயர்த்த உதவும்.
  • தேசிய ஊடகக் குழு(national media team) ஒன்றை அமைக்க அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இது அமீரக ஊடகத் துறையில் புகழ்பெற்று இருப்பவர்களை உள்ளடக்கிய குழுவாக இருக்கும். இந்த குழு நாட்டின் ஊடகங்களை மேம்படுத்துவதற்கான கொள்கைகளில் செயல்படும்.

 

dubai
0 Shares
Share via
Copy link