துபாயில் நடைபெற்றுவரும் எக்ஸ்போ 2020 ஐ சிறப்பிக்கும் விதமாக புதிய நினைவு ஸ்டாம்பை வெளியிட்டுள்ளது எமிரேட்ஸ் போஸ்ட் நிறுவனம். லீடர்ஷிப் பெவிலியனில் நடைபெற்ற இந்த வெளியீட்டு விழாவில் அமீரக சகிப்புத்தன்மை மற்றும் சகவாழ்வு அமைச்சர் மற்றும் எக்ஸ்போ 2020 கமிஷனர் ஜெனரலான ஷேக் நஹ்யான் முபாரக் அல் நஹ்யான் கலந்துகொண்டு சிறப்பு அஞ்சல் தலையைப் பெற்றுக்கொண்டார்.
எமிரேட்ஸ் போஸ்டின் தலைமை நிர்வாக இயக்குனர் அப்துல்லா முகமது அலாஷ்ரம் நினைவு அஞ்சல் தலையை அல் நஹ்யானுக்கு வழங்கினார்.
சிறப்பு அஞ்சல் அட்டையுடன் கூடிய இந்த அஞ்சல் தலையில் எக்ஸ்போவின் முக்கிய தளமான அல் வாசில் பிளாஸா, அமீரகத்தின் டேரா (Terra), ஆலிஃப் (Alif), மிஷன் பாசிபிள் (Mission Possible) ஆகிய பெவிலியன்களின் புகைப்படங்களும் இதில் இடம்பெற்றுள்ளன.
“மனதை இணைப்பதன் மூலமாக எதிர்காலத்தை உருவாக்குதல்” என்னும் தத்துவத்தின் அடிப்படையில் இந்த பெவிலியன்கள் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சக நாடுகளுடனான உறவை வலுப்படுத்தல், வியாபார வளர்ச்சியை அதிகரித்தல், உலக மக்கள் மற்றும் புவிக்கு நன்மையை அளித்தல் ஆகியவை இந்த நிகழ்ச்சியின் முக்கிய கருதுகோள்களாக பார்க்கப்படுகின்றன.