UAE Tamil Web

“எப்படியும் பிழைத்துக்கொள்வான் என நினைத்தோம்” – கருணை காட்டாத கடல் – கலங்க வைத்த 5 வயது சிறுவனின் மரணம்..!

-Zaid-Saeed-Al-Sheihi

கடந்த ஏப்ரல் மாதம் 4 ஆம் தேதி, தனது மகனான சையத் சயீத் அல் ஷெய்ஹியை அழைத்துக்கொண்டு ராஸ் அல் கைமாவில் உள்ள கடற்கரைக்குச் சென்றிருக்கிறார் அந்தத் தாய். அவருடைய சகோதரர் முகமது அகமது அல் செய்ஹியும் உடனிருந்திருக்கிறார். கடலில் விளையாடச் சென்ற மகனை கவனிக்காது இருந்ததுதான் அவர்கள் செய்த மிகப்பெரிய தவறு.

திடீரென எழுந்த ராட்சத அலையினால் சிறுவன் அடித்துச்செல்லப்பட்ட, இதைப்பார்த்த வீட்டு உதவியாளர் சத்தம்போட்டிருக்கிறார். உடனடியாக தாயும் பணியாளப் பெண்மணியும் ஓடிச்சென்று சிறுவனைத் தூக்க முயற்சித்திருக்கின்றனர். அப்போது மற்றொரு அலையினால் தாய் தூக்கி வீசப்பட்டிருக்கிறார். அங்கிருந்த சிலர் அவரை மீட்டாலும், சிறுவனைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

உடனடியாக ராஸ் அல் கைமா காவல்துறைக்குத் தகவல் கொடுக்கப்பட்டிருக்கிறது. ராஸ் அல் கைமா சிவில் பாதுகாப்புத்துறை அதிகாரியான அதேல் ஹன்ஹோன்-இடம் தகவல் தெரிவிக்கப்பட்டதும் பீச் பைக்கில் விரைந்து சம்பவ இடத்திற்கு வந்திருக்கிறார். அதற்குள் ஆம்புலன்ஸ் மற்றும் மீட்புப்படை தேடுதல் வேட்டையை துவங்கியிருந்தது. இதன்பலனாக கரையில் இருந்து 200 மீட்டர் தூரத்தில் மிதந்துகொண்டிருந்த சிறுவனை மீட்புப் படையினர் கண்டுபிடித்து கரைசேர்த்தார்கள்.

கடல்நீரை அதிகமாக குடித்ததால் அவனுக்கு முதலுதவி செய்யப்பட்டிருக்கிறது. ஆரம்பத்தில் அசைவுகள் இல்லையெனினும் குடித்த நீரை உமிழத் துவங்கியதும் முனகல் வெளிப்படவே, உடனடியாக ஷார்ஜாவில் உள்ள அல் காசிமி மருத்துவமனைக்கு சிறுவனைத் தூக்கிச்சென்றனர் மீட்புக் குழுவினர்.

தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த சிறுவன் சையத் 51 நாட்களுக்குப் பிறகு தனது போராட்டத்தை நிறுத்திக்கொண்டான். ஆம். அவன் மரணமடைந்ததாக மருத்துவமனை அறிவித்தது. இதனையடுத்து கடந்த செவ்வாய்க்கிழமை சிறுவனின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டதாக அவனது குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்துப் பேசிய அதேல் ஹன்ஹோன்,” கடலில் இருந்து சிறுவனை கரைக்குக் கொண்டுவந்ததும் அவன் உயிரிழந்துவிட்டான் என்றே நினைத்தோம். ஆனால் அவனிடம் அசைவு இருப்பதைக்கண்டு உடனடியாக அல் காசிமி மருத்துவமனைக்கு அவன் கொண்டுசெல்லப்பட்டான். எப்படியும் பிழைத்துக்கொள்வான் என நினைத்தோம். ஆனால் அவனது மறைவு அனைவரையும் வருந்தச் செய்கிறது. கடற்கரைக்கு குழந்தைகளுடன் வருபவர்கள் கவனமாக இருக்கவேண்டும். தனியாக அவர்களைக் கடலில் குளிக்க அனுமதித்தல் கூடாது” என்றார்.

-Zaid-Saeed-Al-Sheihi
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap