UAE Tamil Web

அபுதாபி: முக்கிய சாலைக்கு ஷேக்கா பாத்திமாவின் பெயரை வைத்த அபுதாபி இளவரசர்..!

sheikha Fatima

அமீரக மகளிர் தினத்தை முன்னிட்டு, அமீரகத்தின் தாயாகக் கருதப்படும் ஷேக்கா பாத்திமா பின்ட் முபாரக் அல் நஹ்யான் அவர்களுடைய பெயரை முக்கிய சாலை ஒன்றுக்கு வைக்க அபுதாபியின் பட்டத்து இளவரசரும் அமீரக ஆயுதப்படையின் தலைமைத் துணைத் தளபதியுமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.

காஸிர் அல் பஹார் செல்லும் மற்றும் ஷேக் சயீத் பின் சுல்தான் சாலையை குறுக்குவெட்டில் சந்திக்கும் சாலைக்கு ஷேக்கா பாத்திமாவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

அமீரக மகளிர் யூனியனின் தலைவியும் தாய் சேய் உச்ச சபையும் தலைவியும் குடும்ப நல உச்ச சபையின் தலைவியுமான ஷேக்கா பாத்திமா பின்ட் முபாரக் அல் நஹ்யான் அமீரகத்தின் தாயாக கருதப்படுகிறார்.

நேற்று அபுதாபி நிர்வாக அலுவலகத்தின் தலைவரும் அபுதாபி நிர்வாகக் கவுன்சிலின் உறுப்பினருமான ஷேக் காலித் பின் முகமது பின் சயீத் அல் நஹ்யான் அவர்கள் இந்த ஷேக்கா பாத்திமா சாலையைத் திறந்து வைத்தார்.

ஷேக்கா பாத்திமா அவர்களின் வாழ்க்கைப் பயணத்தை பறைசாற்றும் விதமாக இந்த முடிவினை அபுதாபி இளவரசர் எடுத்திருக்கிறார். இந்த சாலை திறப்பு விழாவில் பல்வேறு மூத்த அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

அமீரக பெண்கள் பல்வேறு துறைகளில் சாதிக்க உறுதுணையாக விளங்கும் ஷேக்கா பாத்திமாவின் முயற்சிகளை பாராட்டும் விதமாக இந்த அறிவிப்பினை அபுதாபி ஆட்சியாளர் வெளியிட்டிருப்பதாக அபுதாபி ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதேபோல, அமீரகத்தின் துணைத்தலைவரும் பிரதமரும் துபாயின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்களும் ஷேக்கா பாத்திமா பின்ட் முபாரக் அல் நஹ்யான் அவர்களை அமீரக பெண்கள் தினத்தன்று பாராட்டியுள்ளார்.

sheikha Fatima
1 Share
Share via
Copy link