UAE Tamil Web

அபுதாபி வெடிவிபத்து : பாதிக்கப்பட்ட மக்களின் தற்காலிக தங்குமிடங்களுக்கான செலவை அரசே ஏற்கும் – ஷேக் ஹம்தான் அறிவிப்பு..!

sheikh hamdan

அபுதாபியில் கடந்த திங்கட்கிழமை உணவு விடுதியில் எரிவாயு கசிவின் காரணமாக பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதன் காரணமாக இதுவரையில் 3 பேர் உயிரிழந்திருக்கின்றனர். பாதுகாப்பு காரணம் கருதி விபத்து ஏற்பட்ட பகுதிக்கு அருகில் இருந்த குடியிருப்பாளர்கள் வேறு பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச்செல்லப்பட்டார்கள்.

அபுதாபி முழுவதிலும் உள்ள பல்வேறு தங்கும் விடுதிகளில் தங்கவைக்கப்பட்டிருக்கும் மக்களின் தற்காலிக தங்குமிடத்திற்கான செலவை அமீரக ரெட் கிரெசென்ட் (ERC) ஏற்கும் என ஆட்சியாளரின் அல் தஃப்ரா பகுதிக்கான பிரதிநிதியும் அமீரக ரெட் கிரெசென்ட் அமைப்பின் தலைவருமான ஷேக் ஹம்தான் பின் சயீத் அல் நஹ்யான் (Sheikh Hamdan bin Zayed Al Nahyan) அறிவித்திருக்கிறார்.

வெடிவிபத்து காரணமாக பாதிக்கப்பட்டிருக்கும் 208 தனிநபர்களுக்கும் 38 குடும்பங்களுக்கும் தேவையான உதவிகளை ERC மேற்கொள்ளும் என செவ்வாய்கிழமை ஷேக் ஹம்தான் அறிவித்தார்.

ERC தன்னார்வலர்களின் மூலமாக வெடி விபத்து நிகழ்ந்த இடத்திற்கு அருகாமையில் உள்ள குடியிருப்பாளர்களை உடனடியாக மீட்டது அபுதாபியில் உள்ள ERC மையம்.

இதுகுறித்துப் பேசிய ERC யின் தலைமை இயக்குனரான டாக்டர். முகமது அதீக் அல் ஃபலாகி  (Mohammed Ateeq Al Falahi),” கடினமான காலங்களில் மக்களோடு மக்களாக நின்று அவர்தம் துயரைக் குறைக்கும் வகையிலான இம்முடிவை ஷேக் ஹம்தானின் வழிகாட்டுதலின்படி மேற்கொண்டோம். ERC வெடி விபத்தினால் துயருற்ற மக்களுக்கு ஆறுதல் அளித்துவருகிறது. ஷேக் ஹம்தானின் மனித நேயமிக்க உத்தரவின் அடிப்படையில் மேற்கொண்ட நடவடிக்கைகளின் மூலமாக மக்கள் தங்களுக்கான அன்றாட வேலைகளை கவனிக்கும் வகையில் சூழல் மாறியுள்ளது” என்றார்.