37.4 C
Dubai
August 10, 2020
UAE Tamil Web

சென்னை, திருவனந்தபுரம், மும்பை உள்ளிட்ட 58 இலக்குகளுக்கான தனது சேவையை மீண்டும் துவங்கும் எதிஹாட் ஏர்வேஸ்..!

Etihad_

அபுதாபி : அமீரகத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானப் போக்குவரத்திற்கான தடைகள் தளர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, உலகம் முழுவதும் உள்ள 58 இலக்குகளுக்கான தனது சேவைகளை ஜூலை – ஆகஸ்டு மாதங்களில் படிப்படியாக துவங்க இருப்பதாக எதிஹாட் ஏர்வேஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

மத்திய கிழக்கு, வட அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 58 இலக்குகளுக்கு எதிஹாட் தனது விமான சேவையை வழங்க இருக்கிறது. சர்வதேச அளவிலான விமானப் போக்குவரத்துக்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதும் தனியார் சந்தைகள் திறக்கப்படுவதையும் பொறுத்தே எதிஹாட் நிறுவனத்தின் இந்த புதிய அறிவிப்பு செயல்படுத்தப்படும்.

“உலகம் முழுவதிலும் உள்ள பல்வேறு இடங்களுக்கு விமான சேவைகளை மீண்டும் படிப்படியாக வழங்க இருப்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறோம். அமீரகத்திலிருந்து வெளிநாடுகளுக்குச் செல்லவும், பிற நாடுகளில் இருந்து அமீரகம் வரவும் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடு தளர்த்தப்பட்டது அபுதாபியின் வளர்ச்சிக்கான வாசலை திறந்திருக்கிறது. கொரோனா தாக்கத்திற்கு முன்னதான எங்களுடைய இயக்கத்தில் 45 சதவிகிதத்தை ஆகஸ்டு மாதத்தில் அடைவதே எங்களுடைய நோக்கமாகும்” என எதிஹாட் விமான போக்குவரத்து நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திரு. டோனி டக்ளஸ் (Tony Douglas) தெரிவித்தார்.

கடந்த மாதம் முதல் திட்டமிடப்பட்ட சிறப்பு பயணிகள், சரக்கு மற்றும் மனிதாபிமானத்தின் அடிப்படையில் இயக்கப்பட்டுவந்த விமான சேவைகள் தொடரும் எனவும் அதே நேரத்தில் சந்தை மீண்டும் திறக்கப்பட்டிருப்பதால் விமான சேவையை மீண்டும் நடைமுறைக்குக் கொண்டுவருவதற்கு அதிக முன்னுரிமை அளிக்கிறோம் எனவும் டக்ளஸ் தெரிவித்தார்.

எதிஹாட் நிறுவனத்தின் அனைத்து விமானங்களும் சுகாதார மற்றும் பாதுகாப்பு வழிமுறைகளைத் தொடர்ந்து பின்பற்றும் என டக்ளஸ் உறுதியளித்தார். கடந்த ஜூன் மாதம் எதிஹாட் நிறுவனம் வெளியிட்ட  ஆரோக்கிய திட்டம் மூலமாக, பயணிகள் மன நிறைவோடு பயணிக்க ஏதுவான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டதுடன், பயணத்தின் ஒவ்வொரு படிநிலையிலும், மேற்கொள்ளப்பட்டிருக்கும் பாதுகாப்பு மற்றும் சுத்திகரிப்பு பணிகள் குறித்து பயணிகளிடம் தெரிவிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கடந்த சில மாதங்களாக எங்களுடைய சேவைகளை மேம்படுத்தவும் எங்களுடைய சேவையை மதிப்பாய்வு செய்யவும் எங்களுடைய வரலாற்றிலேயே மிகப்பெரிய பராமரிப்புப் பணிகளுக்காகவும் உழைத்திருக்கிறோம் என டக்ளஸ் தெரிவித்தார்.

திட்டமிடப்பட்ட விமானங்கள் செல்லும் இடங்கள்

வட அமெரிக்கா: சிகாகோ, நியூயார்க் JFK,  டொராண்டோ மற்றும் வாஷிங்டன் டிசி.

ஐரோப்பா : ஆம்ஸ்டர்டாம், ஏதென்ஸ், பார்சிலோனா, பெல்கிரேட், பிரஸ்ஸல்ஸ், டியுப்ளின், டஸல்டார்ஃப், பிராங்ஃபர்ட், ஜெனிவா, இஸ்தான்புல், லண்டன் ஹீத்ரோ, மாட்ரிட், மான்செஸ்டர், மிலான், மாஸ்கோ, முனிச், பாரிஸ் சார்லஸ் டி காலே, ரோம் மற்றும் ஜூரிச்.

மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்கா : அம்மான், பஹ்ரைன், பெய்ரூட், கெய்ரோ, கேசபிளாங்கா, குவைத், மஸ்கட், ராபாத், ரியாத் மற்றும் சீஷேல்லஸ்.

ஆசியா : அகமதாபாத், பாகு, பேங்காக், பெங்களூரு, சென்னை, கொழும்பு, டெல்லி, ஹைதராபாத், இஸ்லாமாபாத், ஜகார்த்தா, கராச்சி, கொச்சி, கொல்கத்தா, கோழிக்கோடு, கோலாலம்பூர், லாகூர், மாலே, மணிலா, மும்பை, சியோல், சிங்கப்பூர், திருவனந்தபுரம் மற்றும் டோக்கியோ.

ஆஸ்திரேலியா : மெல்போர்ன், சிட்னி.

இதையும் படிங்க.!