இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளில் சிக்கியிருக்கும் அமீரக ரெசிடன்சி விசா வைத்திருப்பவர்கள் மட்டும் இன்று முதல் (05-08-2021) அமீரகத்திற்குள் நுழைய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக விதிக்கப்பட்டிருந்த பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதை தொடர்ந்து இந்தியாவில் இருந்து விமான சேவையை உடனடியாக தொடங்குவதாக எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் அறிவித்திருந்தது. இதனால் இந்தியாவில் தங்கியிருந்த அமீரக ரெசிடன்சி விசா வைத்திருப்பவர்கள் போட்டிப்போட்டுக் கொண்டு அமீரகம் திரும்ப டிக்கெட் முன்பதிவு செய்த வண்ணம் உள்ளனர். அதேசமயம் இந்தியா உள்ளிட்ட நோய் பாதிப்பு அதிகமுள்ள நாடுகளில் இருந்து விமான சேவையை தொடங்குவது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என எதிஹாட் ஏர்லைன்ஸ் நிறுவனம் ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்த நிலையில் வரும் ஆகஸ்ட் 10ம் தேதி முதல் அபுதாபிக்கு இந்தியாவில் இருந்து நேரடி விமான சேவையை தொடங்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்று எதிஹாட் ஏர்லைன்ஸ் வெளியிட்டுள்ளது. மேலும் இந்தியாவில் இருந்து நேரடியாக அபுதாபிக்கு வருவதற்கு ஒருசில வழிகாட்டு நெறிமுறைகளையும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
எதிஹாட் அறிவித்துள்ள பயண நெறிமுறைகள்:
1. அபுதாபியில் இறங்கியதும் 10 நாட்கள் கண்டிப்பாக தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்
2. விமான நிலையத்தில் தரப்படும் ட்ராக்கிங் பேண்டை (Tracking Wristband) தனிமைப்படுத்துதலின்போது அணிந்திருக்க வேண்டும்
3. அபுதாபிக்கு வந்ததில் இருந்து 4, 8ம் நாட்களில் PCR டெஸ்ட் எடுக்க வேண்டும்
4. 2 தவணை தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். விமானத்தில் பயணிப்பதற்கு குறைந்தபட்சம் 14 நாட்களுக்கு முன்பே 2வது தவணை தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்
5.விமானத்தில் பயணிப்பதற்கு 48 மணி நேரத்திற்கு முன்னதாக PCR பரிசோதனை செய்து நெகடிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்
