UAE Tamil Web

ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற இந்திய ஹாக்கி அணியின் கோல் கீப்பருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த அமீரக வாழ் இந்தியத் தொழிலதிபர்!

Shamsheer_

சமீபத்தில் நடந்துமுடிந்த டோக்கியோ ஒலிம்பிக்கில் 41 வருடங்கள் கழித்து இந்திய அணி பதக்கத்தைக் கைப்பற்றியது. வெண்கலப் பதக்கத்திற்கான ஆட்டத்தில் ஜெர்மனியை வீழ்த்தி, வரலாற்று வெற்றியை பதிவு செய்தது இந்தியா. ஆட்டத்தின் கடைசி நிமிடங்களில் இந்தியாவின் கோல் கீப்பர் பிஆர் ஸ்ரீஜேஷ் ஜெர்மனியின் கோல் அடிக்கும் முயற்சிகளை தவிடுபொடியாக்கி வெற்றிக்கு வித்திட்டார்.

இந்நிலையில் அமீரகத்தின்  VPS  ஹெல்த்கேர் குழுமத்தின் தலைவரும் தொழிலதிபருமான டாக்டர் ஷம்ஷீர் வயலில் ஸ்ரீஜேஷிற்கு 1 கோடி ரூபாய் வழங்குவதாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்துப் பேசிய அவர்,”ஒலிம்பிக்கில் தனது சிறப்பான செயல்பாட்டின் மூலம், ஸ்ரீஜேஷ் உலகெங்கிலும் உள்ள இந்தியர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கிறார். ஒரு சக மலையாளியாக, அவருடைய சாதனையில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். அவரது முயற்சிகளுக்கு நன்றி. மக்களிடையே இந்த வெற்றியின் மூலம் ஹாக்கி மீதான ஆர்வம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த இந்திய ஹாக்கி அணி மற்றும் அவரது செயல் நாட்டின் நூற்றுக்கணக்கான இளைஞர்களுக்கு ஊக்கமாக அமையும்” என்றார்.

இந்தியாவின் பல்வேறு அமைப்புகள் ஹாக்கி அணிக்கு பரிசுகளை அளித்திருந்தாலும் இன்றைய தேதியில் ஸ்ரீஜேஷிற்கு கிடைத்த மிகப்பெரிய தொகை இதுதான்.

இதுகுறித்துப் பேசிய ஸ்ரீஜேஷ்,” டாக்டர். ஷம்ஷீர் ஹாக்கி அணிக்கு வாழ்த்து தெரிவித்ததுடன் உறுதுணையாகவும் இருக்கிறார். அவருடைய பரிசு என்னை பெருமகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நான் அதிர்ஷ்டசாலி என்றே நினைக்கிறேன்” என்றார்.

“இந்தப் பரிசு அவருடைய கடின உழைப்பிற்கு கிடைத்த வெகுமதி. இன்னும் பல ஆண்டுகளுக்கு அவர் செய்த செயல் மக்களால் நினைவுகூரப்படும். அடுத்த தலைமுறை விளையாட்டு வீரர்களுக்கு ஸ்ரீஜேஷ் உத்வேகம் அளிப்பவராக இருப்பார் என நம்புகிறேன்” என ஷம்ஷீர் தெரிவித்தார்.

கொச்சியில் ஸ்ரீஜேஷிற்கு சிறப்பு நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டு, அப்போது பரிசுத்தொகை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Shamsheer_
0 Shares
Share via
Copy link