அஜ்மனில் உள்ள கார் வாஷ் மையம் ஒன்றில் விளையாட்டாக சக தொழிலாளி மீது ஒருவர் தண்ணீர் தெளித்து விளையாடியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த 38 வயது தொழிலாளி தண்ணீர் தெளித்தவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். விளையாட்டாக செய்ததாக கூறியும் அவர் விட்டுக்கொடுக்காததால் இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தான் தங்கியிருந்த அறைக்குச் சென்ற அந்த நபர் கத்தியை எடுத்து வந்து தன் மீது தண்ணீரை தெளித்த சக தொழிலாளியை சரமாரியாக குத்தியுள்ளார். வலியால் துடிதுடித்து படுகாயம் அடைந்த அந்த நபர் உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தகலறிந்து சென்ற அஜ்மன் போலீசார், கத்தியால் குத்திய நபரை கைது செய்து விசாரித்தனர். விசாரணையில் தொடர்ந்து சக தொழிலாளி சீண்டி வந்ததால் ஆத்திரத்தில் செய்வதறியாது கத்தியால் குத்திவிட்டதாக தெரிவித்தார். இதையடுத்து கத்தியால் குத்திய 38 வயது நபருக்கு அஜ்மன் நீதிமன்றம் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.