UAE Tamil Web

குறைந்த செலவில் இந்தியாவிலிருந்து அமீரகம் வர இது ஒன்று தான் வழி…!

Stock-India-airport-Indigo

இந்தியாவில் கொரோனா இரண்டால் அலை உச்சம் தொட்டதைத் தொடர்ந்து இந்தியாவில் இருந்து பயணிகள் விமானம் அமீரகம் வரத் தடை விதித்தது அமீரக அரசு. ஏப்ரல் 25 ஆம் தேதிமுதல் இந்த தடைக்காலம் துவங்கியது. இதனால் தாயகத்தில் சிக்கிக்கொண்ட பல அமீரக வாழ் இந்தியர்கள் பாதிக்கப்பட்டனர்.

கோல்டன் விசா, சில்வர் விசா, அரசுப் பிரதிநிதிகள் ஆகியோருக்கு பயணத்தடையில் விலக்கு அளிக்கப்பட்டிருந்தாலும் சாதாரண மக்களால் அமீரகம் திரும்ப முடியாமல் போனது பல்வேறு வகையில் அவர்களைப் பாதித்தது அல்லது பாதித்துக்கொண்டிருக்கிறது.

இதனால் இந்தியாவில் இருந்து பலரும் வெளிநாடுகள் சென்று அங்கே 14 நாட்கள் செலவிட்டு அதன்பின்னர் அங்கிருந்து அமீரகம் திரும்பிவருகின்றனர். கூடுதல் செலவு தான் என்றாலும் வேலையைத் தக்கவைத்துக்கொள்ளவும் குடும்பத்தினோடு இணையவும் இதைவிட்டால் வேறு வழியில்லை என்கின்றனர் இம்மக்கள்.

ஜிஸ்மீத் காந்தி, அனுபம் சிங் மற்றும் நாசர் ஷேக் ஆகிய மூன்று இந்தியர்களும் இப்படி திட்டமிட்டு இந்தியாவில் இருந்து ஆர்மீனியா சென்றிருக்கிறார்கள். பல்வேறு காரணங்களினால் அமீரகத்திலிருந்து மார்ச், ஏப்ரல் மாதத்தில் இந்தியா சென்ற இவர்களால் மீண்டும் அமீரகம் திரும்ப முடியாமல் போனதே அவர்களது இச்செயலுக்குக் காரணமாகும்.

இதுகுறித்துப் பேசிய ஜிஸ்மீத் காந்தி,” மார்ச் மாதம் பிறந்த எனது குழந்தையைக் காண இந்தியா சென்றேன். துரதிருஷ்டவசமாக நான் அங்கே சிக்கிக்கொண்டேன். எனது குழந்தை மற்றும் மனைவியை அமீரகம் அழைத்துவருவதே என்னுடைய திட்டம். என் குழந்தைக்கான நுழைவு அனுமதியைக்கூட பெற்றுவிட்டேன். எனது மனைவி அமீரகத்திலிருந்து வந்து 180 நாட்கள் ஆகிவிட்டது. அவரது ரெசிடென்சி விசா மூலமாக மீண்டும் அமீரகத்திற்குள் அனுமதிக்கப்படும் வகையிலான ஏதேனும் கருணைத் திட்டம் நடைமுறையில் இருக்கிறதா என்பதும் தெரியவில்லை” என்றார்.

ஐடி துறையில் பணிபுரியும் காந்தி மே மாதம் முதல் வீட்டிலிருந்தே பணிகளை கவனித்துக்கொள்கிறார். மேலும் போக்குவரத்துத்தடை குறித்து அவர் பேசுகையில்,” நிலைமை எப்போது சரியாகும் என யாருக்குத் தெரியும்? இந்தியாவிற்கு வெளியே 14 நாட்கள் தங்கியிருந்தவர்களை மட்டுமே அமீரகம் அனுமதிப்பதால் தான் நான் ஆர்மீனியா சென்றேன். இந்தப் பயணத்திற்காக 6500 திர்ஹம்ஸ் செலவுசெய்துள்ளேன்” என்றார்.

இப்படி உலகமெங்கும் தவித்துவரும் பலர் அமீரகம் திரும்புவது குறித்த தங்களுடைய எண்ணங்கள், ஐடியாக்களை சமூக வலைத்தளங்கள் வாயிலாக பகிர்ந்துகொள்கின்றனர். சில வாட்சாப் குழுக்களும் இதற்காக இயங்கி வருகின்றன.

தன்னுடைய அனுபவத்தைப் பகிர்ந்துகொண்ட அனுபம் சிங்,” எனது மனைவி, மற்றும் ஒன்றரை வயது மகனுடன் இரண்டு வாரமாக ஆர்மீனியாவில் இருக்கிறேன். மோசமான விடுமுறை இது. என் மகனை வெளிநாட்டிற்கு இப்படியான சூழ்நிலையில் அழைத்துச் செல்வது வருத்தமாக இருக்கிறது. என்னுடைய பேஸ்புக் நண்பர் ஒருவர் மே மாதம் ஆர்மீனியா வந்து பின்னர் அமீரகம் சென்றிருக்கிறார். அவரது திட்டம் தெளிவாக இருந்தது. ஆகவே நானும் அதைத் தேர்ந்தெடுத்தேன். இதற்காக நான் 15,000 திர்ஹம்ஸ் செலவுசெய்துள்ளேன்” என்றார்.

காந்தி மற்றும் அனுபம் போல ஆர்மீனியா சென்றுள்ள நாசர் இதுகுறித்துப் பேசுகையில்,” என்னுடைய விசா காலாவதியாக இருக்கிறது. வேலை இழக்கும் அபாயத்தைத் தவிர்க்க இந்த முயற்சியில் இறங்குவதைத் தவிர வேறு வழியில்லை” என்றார்.

“அமீரகத்திலேயே 7 – 10 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள அனுமதித்திருந்தால் ஆர்மீனியா செல்லவேண்டிய தேவை வந்திருக்காது. அவ்வாறு அமீரக ஹோட்டல்களில் குவாரண்டைன் செய்துகொள்வது உள்ளூர் பொருளாதார வளர்ச்சிக்கு உதவிய திருப்தியையும் எங்களுக்குக் கொடுத்திருக்கும்” என காந்தி தெரிவித்தார்.

சமீப வாரங்களாக வெளிநாடுகளில் சிக்கிக்கொண்ட அமீரக வாழ் மக்கள் பலரும் ஆர்மீனியா, உக்ரைன், ரஷ்யா, உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளுக்குச் சென்று பின்னர் அங்கிருந்து அமீரகம் வருகிறார்கள்.

தனிவிமானங்களில் 30,40 லட்சங்கள் செலவழித்து அமீரகம் வருவதற்கு இது சிறந்தவழி என்பதே இவர்களின் வாதமாக இருக்கிறது.

Stock-India-airport-Indigo
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap