துபாய் எக்ஸ்போ 2020 காரணமாக துபாய் விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் எண்ணிக்கை கணிசமாக உயரும் என அதிகாரிகள் சமீபத்தில் தெரிவித்திருந்தனர். அது நிஜமாகும்படி கடந்த அக்டோபர் 11 ஆம் தேதி துபாய் விமான நிலையத்திற்கு 1 லட்சம் பேர் வந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்துப் பேசிய GDRFA வின் ஏர்போர்ட் பாஸ்போர்ட் விவகாரத்துறையின் துணை இயக்குனர் மேஜர் ஜெனரல் தலால் அஹமது அல் ஷங்கிடி,” எக்ஸ்போ துவங்கியதிலிருந்து துபாய் விமான நிலையத்திற்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை உயரும் என எதிர்பார்த்திருந்தோம். போலவே, சமீபத்தில் துபாய் விமான நிலையத்திற்கு 5 லட்சம் பேர் வந்திருக்கிறார்கள். அடுத்த ஆறு மாதத்திற்குள் 15 – 20 மில்லியன் பயணிகளை எதிர்பார்க்கிறோம். அக்டோபர் 11 ஆம் தேதிமட்டும் ஒரு லட்சம் பயணிகள் துபாய் விமான நிலையத்திற்கு வந்திருக்கிறார்கள்” என்றார்.
அதிகரிக்கும் பயணிகளின் எண்ணிக்கையால் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் எவ்வித தொய்வும் ஏற்படவில்லை எனவும் மக்கள் தொடர்ந்து முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுமாறு அறிவுறுத்துவதாகவும் ஷிங்கிடி குறிப்பிட்டார்.
