துபாயில் நடைபெற்று வரும் உலகின் பிரம்மாண்ட நிகழ்வான எக்ஸ்போ 2020 வரும் ஞாயிற்றுக்கிழமையன்று 10 மில்லியன் வருகையை பதிவு செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு எக்ஸ்போவிற்குள் பார்வையாளர்கள் நுழைய 10 திர்ஹம் மட்டுமே கட்டணம் என அதிரடி சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
10 மில்லியன் வருகையை முன்னிட்டு, ஜனவரி 16ந் தேதி நடத்தப்படும் கொண்டாட்டங்களில், பார்வையாளர்கள் கலந்துக் கொள்ளுமாறு அமைப்பாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். இந்த நாள் பொழுதுபோக்கிற்கு குறைவில்லாமல், நினைவுகூரக்கூடிய ஒன்றாக இருக்கும் என உறுதியளித்துள்ளனர்.
கொரியா குடியரசு தனது தேசிய தினத்தை பாரம்பரிய ஜாங்-கு டிரம்ஸ், டேக்வாண்டோ தற்காப்பு கலை என ஜூபிலி ஸ்டேஜில் இரவு 7.30 மணிக்கு சிறப்பு கே-பாப் இசை நிகழ்ச்சியுடன் கொண்டாடும். இதில் கலைஞர்கள் பலர் கலந்து கொள்ள உள்ளனர்.
எக்ஸ்போ 2020க்கான டிக்கெட்டுகள் இன்று மாலை 5 மணிக்கு ஆன்லைனில் அல்லது துபாய் கேட்டில் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே சீசன் பாஸ் வைத்திருக்கும் பார்வையாளர்களுக்கு, கூடுதல் கட்டணம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் எப்போதும் போல, எக்ஸ்போவிற்குள் நுழைய பார்வையாளர்கள் 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட நெகட்டிவ் PCR சோதனை முடிவுடன், தடுப்பூசி போட்டதற்கான ஆதாரத்தையோ சமர்பிக்க வேண்டும்.
தடுப்பூசி போடாத பார்வையாளர்கள், டிக்கெட்டைப் பயன்படுத்தி அமீரகத்தில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட மையங்களில் இருந்து இலவச PCR சோதனைகளைப் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.