இந்தியாவின் ஆஸ்கார் நாயகன் தலைமையில் பிர்தௌஸ் இசைக் கச்சேரி துபாய் எக்ஸ்போ 2020 ல் நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது நினைவிருக்கலாம். இதனிடையே தற்போது துபாய் எக்ஸ்போவில் ஸ்பேஸ் வீக் (space week) என்னும் விண்வெளி ஆராய்ச்சிகளை கவுரவப்படுத்தும் வாரம் கொண்டாடப்பட்டுவருகிறது. இதனையடுத்து ரஹ்மானின் சிறப்பு கச்சேரி இன்று இந்த வாரம் (நாளை) நடைபெற இருக்கிறது.
எக்ஸ்போவின் ஜூப்ளி பார்க்கில் நாளை மாலை 7 மணிக்கு இந்நிகழ்ச்சி துவங்குகிறது. இந்தக் கச்சேரியின் இறுதியில் அல் அமல் என்னும் தீமில் ரஹ்மான் சிறப்பு இசையமைப்பை பார்வையாளர்களுக்கு வழங்க இருக்கிறார்.
இதில் 23 அரபு நாடுகளைச் சேர்ந்த 50 பெண்கள் பல்வேறு இசைக்கருவிகளை இசைத்து பார்வையாளர்களை பிரம்மிக்கவைக்க இருக்கிறார்கள்.
அல் அமல் என்ற அரபு வார்த்தைக்கு ஆங்கிலத்தில் Hope என்பது பொருளாகும். செவ்வாய் கிரகத்திற்கு அமீரக அரசு செலுத்திய விண்கலனின் பெயரும் ஹோப் என்பது வாசகர்களுக்கு நினைவிருக்கலாம்.
இதுகுறித்து ரஹ்மான் பேசுகையில்,” வாழ்வின் தேடல் என்பது தெரியாததை தெரிந்துகொள்வதாகும். விண்வெளியை ஆராய்வது நம்மையே நாம் ஆராய்வதைப் போன்றது” என்றார்.
இந்த இசை நிகழ்ச்சியைக் காண எக்ஸ்போ டிக்கெட் வைத்திருப்பவர்கள் முன்கூட்டியே ஜூப்ளி பார்க்கிற்கு வரவேண்டும் எனவும் குறைவான இருக்கைகளே இருப்பதால் முதலில் வரும் பார்வையாளர்களுக்கு மட்டுமே இசைக் கச்சேரியைக் காண வாய்ப்புக் கிடைக்கும் என நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
