UAE Tamil Web

துபாய் எக்ஸ்போவைக் கலக்க இருக்கும் AR ரஹ்மானின் மகள் மற்றும் தமிழக சிறுவன் லிடியனின் இசை நிகழ்ச்சி..!

LYDIAN

புகழ்பெற்ற தமிழக இசையமைப்பாளரான ஏஆர் ரஹ்மானின் மகளும் பாடகியுமான கதீஜா ரஹ்மான் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த பியானோ இசையமைப்பாளரான லிடியன் நாதஸ்வரம் ஆகியோர் துபாய் எக்ஸ்போ 2020 ல் நடைபெற இருக்கும் பிர்தவுஸ் இசைக்கச்சேரியில் பங்கேற்க இருக்கிறார்கள்.

வரும் நவம்பர் 20 ஆம் தேதி சர்வதேச குழந்தைகள் தினத்தை முன்னிட்டு எக்ஸ்போவில் நடைபெற இருக்கும் இக்கச்சேரியில் பங்கேற்க ஆர்வமாக இருப்பதாக கதீஜா தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்துப் பேசிய அவர்,” இது ஒரு அற்புதமான இசைக்குழுவாகும், மேலும் இதுபோன்ற பல முயற்சிகள் முன்னெடுக்கப்பட வேண்டும். இதன்மூலம் தயாரிப்பாளர்கள், ஒலி பொறியாளர்கள், இசையமைப்பாளர்கள், இயக்குநர்கள் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் பாலின இடைவெளியைக் குறைக்கும் வகையில் பெண்களும் பங்கேற்பதை உறுதிசெய்யமுடியும்” என்றார்.

16 வயதான லிடியன் இதுகுறித்துப் பேசுகையில்,” இந்த சிம்பொனி ஆர்கெஸ்ட்ரா நிகழ்ச்சி பலருக்கு குறிப்பாக குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் என நம்புகிறேன். எக்ஸ்போ என்னைப்போன்ற வளரும் கலைஞர்களுக்கு மிகப்பெரிய வாய்ப்புகளை வழங்குகிறது” என்றார்.

எக்ஸ்போவின் ஜூப்ளி பார்க்கில் நடைபெற இருக்கும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்க எக்ஸ்போ டிக்கெட்டை பார்வையாளர்கள் வைத்திருந்தால் போதுமானது. குறைவான இருக்கைகளே இருப்பதால் இந்நிகழ்ச்சியைக் காண விரும்புவோர் நிகழ்ச்சிக்கு முன்கூட்டியே வருமாறு நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

LYDIAN
8 Shares
Share via
Copy link