UAE Tamil Web

பொதுமக்கள் பார்வைக்காகத் திறக்கப்படும் துபாய் எக்ஸ்போ 2020 பெவிலியன் – நுழைவுக்கட்டணம் எவ்வளவு? எத்தனை நாள் அனுமதி?

Dubai Expo 2020

துபாய் எக்ஸ்போ 2020 ன் டெரா – தி சஸ்டைனபிளிட்டி பெவிலியன் (Terra – The Sustainability Pavilion) மக்கள் பார்வைக்கு ஜனவரி 22 ஆம் தேதிமுதல் ஏப்ரல் 10 ஆம் தேதிவரையில் திறக்கப்பட இருப்பதாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான டிக்கெட்டுகளை ஜனவரி 16 ஆம் தேதிமுதல் துபாய் எக்ஸ்போ 2020 ன் இணையதளத்திற்குச் சென்று வாங்கிக்கொள்ளலாம். ஒரு டிக்கெட்டின் விலை 25 திர்ஹம்ஸாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விரைவில், அலிஃப் – மொபிலிட்டி பெவிலியன் (Alif – The Mobility Pavilion) மற்றும் மிஷன் பாசிபிள் – தி ஆப்பர்ச்சுனிட்டி பெவிலியன் (Mission Possible – The Opportunity Pavilion) ஆகியவையும் பொதுமக்கள் பார்வைக்கு திறக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

டெரா – தி சஸ்டைனபிளிட்டி பெவிலியன்

டெரா என்றால் புவிக் கிரகம் என்று பொருள். முழுக்க முழுக்க காடுகளுக்குள் நடந்து செல்லும்போது கிடைக்கக்கூடிய அனுபவத்தை மக்கள் பெறவேண்டும் என்ற நோக்கத்தில் இந்த பெவிலியன் கட்டப்பட்டுள்ளது. நீங்கள் இந்த பெவிலியனில் நடந்து செல்கையில் கீழே மர வேர்கள் இழையோடுவது போல தளம் அமைக்கப்பட்டுள்ளது.

புகழ்பெற்ற கிரிம்ஷா கட்டிடக்கலை வல்லுனர்கள் (Grimshaw Architects) இந்தப் பெவிலியனை வடிவமைத்திருக்கிறார்கள். ஆற்றல் இழப்பு, நீர் வீணாகுதல் ஆகியவற்றிற்கு தீர்வு காணும் விதத்தில் பெவிலியனில் பல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதாவது, இந்த பிரம்மாண்ட கூரையின் மேலே 1,055 ஒளி மின்னழுத்த பேனல்கள் (photovoltaic panels) பொருத்தப்பட்டுள்ளன.

இதன்மூலம் கட்டிடத்திற்குத் தேவைப்படும் மின்னாற்றலை சூரியன் மூலமாக பெறலாம். அதேபோல, குடிநீர் மேலாண்மை மற்றும் நீர் சுத்திகரிப்பு நிலையமும் இங்கே அமைந்துள்ளது. ஆக, இயற்கையோடு இயைந்த, அறிவியலின் துணையுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த கட்டிடம் எதிர்கால சந்ததிக்கு எடுத்துக்காட்டாக விளங்க இருக்கிறது.

பாதுகாப்பு காரணங்கருதியும், வாரத்திற்கு 5 நாட்கள் வீதம் குறிப்பிட்ட வேலை நேரங்களில் மட்டுமே திறக்கப்பட இருப்பதாலும் மக்கள் விரைவாக தங்களது டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யுமாறு துபாய் எக்ஸ்போ இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்துப் பேசிய துபாய் எக்ஸ்போ 2020 ன் துபாய் பணியக இயக்குனரும், அமீரக மாநில மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு அமைச்சருமான ரீம் அல் ஹாஷிமி (Reem Al Hashimy),” உலகமே ஸ்தம்பித்து நிற்கையில் அமீரகம் இந்த டெரா – தி சஸ்டைனபிளிட்டி பெவிலியனைத் திறக்கும் முயற்சியை எடுத்து 2021 ஆம் ஆண்டினை தன்னம்பிக்கையுடன் துவங்குவது மகிழ்ச்சியைத் தருகிறது”

நம்முடைய வாழ்வில் மறக்கமுடியாத ஆண்டாக 2020 நினைவுகூரப்படலாம். இருப்பினும் உலகத்தின் பிரஜைகளாக ஒன்றிணைந்து நமது பிரச்சனைகளைத் தீர்க்க நமக்கு மாபெரும் வாய்ப்பையும் அந்தாண்டு வழங்கியிருக்கிறது” என்றார்.

மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா மற்றும் தெற்காசியப் பிராந்தியத்தில் (MEASA) நடைபெற இருக்கும் முதல் உலகளாவிய எக்ஸ்போ இந்த துபாய் எக்ஸ்போ 2020 தான். இந்தாண்டு அக்டோபர் 1 ஆம் தேதிமுதல் அடுத்தாண்டு மார்ச் 31, 2022 ஆம் தேதிவரையில் இது நடக்க இருக்கிறது.

துபாய் எக்ஸ்போ 2020 பற்றிய பல சுவாரஸ்ய தகவல்களைத் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

Dubai Expo 2020
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap