கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு உலகமே திரும்பிப் பார்க்கும் பெருநிகழ்வுகளில் ஒன்றாக அமைந்துள்ளது துபாய் எக்ஸ்போ 2020. 6 மாதங்கள் மிக பிரம்மாண்டமாக நடைபெறும் இந்த கண்காட்சி இன்று நள்ளிரவு கண்கவர் வாண வேடிக்கைகளுடன் தொடங்குகிறது. தொடக்க நிகழ்வாக 3 விதமான வான வேடிக்கை நிகழ்ச்சிகள் நடைபெற இருப்பதாக கண்காட்சி குழு அறிவித்துள்ளது. துபாய் நகரமே ஒளி வெள்ளத்தில் மிதக்கும் அளவும் வான வேடிக்கை மிக பிரம்மாண்டமாக அமைய உள்ளது. இந்த கோலகாலமான நிகழ்ச்சியை அமீரகம் முழுவதும் கண்டுகளிக்க ஏதுவாக விமான நிலையங்கள், உணவகங்கள், நட்சத்திர விடுதிகள், வணிக வளாகங்களில் பெரிய திரை அமைக்கப்பட்டு நேரடி ஒளிபரப்பு நடைபெற இருக்கின்றன.
அமீரகம் முழுவதும் துபாய் எக்ஸ்போ 2020 கண்காட்சியின் தொடக்க விழாவை காண சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இது தவிர www.virtualexpo.world என்ற இணையதளத்திலும் உலக நாட்டு மக்கள் நேரலையை இரவு 7.30 மணி முதல் கண்டு ரசிக்கலாம் என கண்காட்சி ஏற்பாட்டு குழு தெரிவித்துள்ளது. தொடக்க விழாவில் பல்வேறு உலக நட்சத்திரங்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர். இதேபோல நாளை இரவும் கண்கவர் வான வேடிக்கைகள் துபாயின் சுற்றுலா தலங்கள் உள்பட முக்கிய இடங்களில் நடைபெற உள்ளது. அடுத்த 6 மாதங்களுக்கு எக்ஸ்போ 2020 நடைபெற உள்ளதால் துபாய் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது!
