பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நபர்களின் வருடக்கணக்கான உழைப்பினால் உருவான துபாய் எக்ஸ்போ 2020 ன் துவக்க விழா நேற்று நடைபெற்றது. உலக தலைவர்கள், அமீரக ஆட்சியாளர்கள் மற்றும் முன்னணி நட்சத்திரங்கள் இந்த பிரம்மாண்ட நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இதில் பலரையும் கவர்ந்தது எக்ஸ்போவின் ஜூப்ளி பார்க்கில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட கல்வெட்டுத் தொகுதி என்றே சொல்லவேண்டும். இந்தக் கல்வெட்டில் மன்னர்கள் பெயர்களோ, இளவரசர்களின் பெருமைகளோ இடம்பெறவில்லை. கஷ்டப்பட்டு இந்த எக்ஸ்போ 2020 வை உருவாக்கிய 2 லட்சம் தொழிலாளர்களின் பெயர்கள் தான் இந்த கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது.
இதனை லண்டனைச் சேர்ந்த புகழ்பெற்ற வடிவமைப்பாளர் ஆசிப் கான் வடிவமைத்துள்ளார். அமீரக உள்துறை ஒத்துழைப்பு அமைச்சர் மற்றும் எக்ஸ்போ 2020ன் மேற்பார்வையாளர் ரீம் அல் ஹாஷிமி இந்த கல்வெட்டைத் திறந்துவைத்தார்.
இதுகுறித்துப் பேசிய அவர்,” இன்று உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கும் எக்ஸ்போ 2020 நகரத்தை அல்லும் பகலும் கஷ்டப்பட்டு உருவாக்கிய ஒவ்வொரு தொழிலாளரையும் நாங்கள் பாராட்ட நினைக்கிறோம். இதற்கு அவர்கள் தகுதியானவர்கள். நம்முடைய அடுத்த சந்ததியினருக்கு வளமான எதிர்காலத்தை உருவாக்க இணைந்து ஒத்துழைத்த அனைத்து தொழிலாளர்களுக்கும் நன்றி” என்றார்.
