எமிரேட்ஸ் விமான நிறுவனம் 10,000 திர்ஹம்கள் வெகுமதி அளிப்பதாக சமூக ஊடகங்களில் கடந்த சில நாட்களாக வைரலாகி வரும் ஒரு பதிவு “உண்மையல்ல” என்பதை அந்நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது. குறிப்பிட்ட ஒரு போட்டியில் பங்கேற்று, பயனர்கள் 10,000 திர்ஹம்களை வெல்லலாம் என்று அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.
நமது துபாயை தலைமையகமாக கொண்டு செயல்படும் எமிரேட்ஸ் நிறுவனம், அந்த போட்டி போலியாக வெளியான ஒரு தகவல் என்று அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
“ரொக்கப் பரிசுகள் அளிப்பது தொடர்பாக ஆன்லைன் போட்டிகள் சில தற்போது புழக்கத்தில் இருப்பதை நாங்கள் அறிவோம்”, ஆனால் இது நாங்கள் அறிவித்த போட்டி அல்ல, ஆகவே மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்துகிறோம்”.
“உண்மையான தகவல்களுக்கு எங்கள் அதிகாரப்பூர்வ சமூக ஊடக தளங்களை மட்டுமே நம்புமாறு பொதுமக்களை கேட்டுக்கொள்கிறோம்” என்று எமிரேட்ஸ் செய்தித் தொடர்பாளர் ஊடகங்களுக்கு அளித்த அறிக்கையில் தெரிவித்தார்.
மேலும் இதுபோன்ற சந்தர்ப்பங்களில் தெரியாத நபருக்கு பணத்தை மாற்றும்போது அவர்கள் மோசடி செய்யப்படாமல் இருப்பதை உறுதிசெய்ய குடியிருப்பாளர்கள் எச்சரிக்கையாக இருக்கவும் அதிகாரிகள் அறிவுறுத்துகிறார்கள்.
இதேபோல கடந்த 2019ம் ஆண்டில், துபாயின் முதன்மை விமான சேவை நிறுவனமான எமிரேட்ஸ்ல் 500 இலவச டிக்கெட்டுகள் வழங்கப்படுவதாக செய்தி வெளியானதும் பின்னர் அது போலியானது என்றும் எமிரேட்ஸ் நிறுவனம் உறுதிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.