அபுதாபியை மையமாகக்கொண்டு இயங்கிவரும் VPS ஹெல்த்கேர் நிறுவனத்தின் பெயரில் போலி வேலைவாய்ப்பு நேர்காணல் முயற்சிகள் நடைபெற்றுள்ளது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
VPS ஹெல்த்கேர் நிறுவனத்தின் கிளை நிறுவனமான ரெஸ்பான்ஸ் ப்ளஸ் மெடிக்கல் சர்வீசஸ் (RPM) நிறுவனத்தில் இல்லாத காலிப் பணியிடங்களுக்கு சில மோசடி நபர்கள் நேர்காணல்களை நடத்தியுள்ளனர். அப்படியான காலிப்பணியிடங்களே தங்களது நிறுவனத்தில் இல்லை என RPM தெளிவுபடுத்தியுள்ளது.
குறிவைக்கப்படும் தென்னிந்தியர்கள்
சமீபத்தில் கேரளாவில் இருந்து 300 க்கும் மேற்பட்ட செவிலியர்களை அமீரகம் அழைத்துவந்த ஏஜெண்ட், அவர்களை ஏமாற்றியது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இப்போதும் அதேபோல, RPM நிறுவனத்தின் சார்பில் போலி இண்டர்வியு ஒன்று நடத்தப்பட்டிருக்கிறது.
இதில் மருத்துவ உதவியாளர் பணிக்காக ஒரு இளைஞர் விண்ணப்பிக்க, ஆன்லைன் காணொளி மூலமாக அவருக்கு நேர்காணல் நடைபெற்றிருக்கிறது. அதில் தேர்ச்சி பெற்ற அவருக்கு 5000 திர்ஹம்ஸ் ஊதியம் மற்றும் தங்குமிடம் வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வாட்சாப் மூலமாக பணி நியமன ஆணையும் வழங்கப்பட்டுள்ளது.
இருப்பினும் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று பார்த்ததில் தான் ஏமாற்றப்பட்டிருக்கிறோம் என்பது அவருக்கு தெரியவந்திருக்கிறது. உடனடியாக நிறுவனத்திடம் இதுகுறித்த தகவலையும் அவர் அளித்திருக்கிறார்.
இதுகுறித்துப் பேசிய RPM நிர்வாகத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மேஜர் டாம் லூயிஸ்,” சமீபத்தில் நடைபெற்றதிலேயே மிகப்பெரிய வேலைவாய்ப்பு மோசடி இது. கொரோனா சூழலைப் பயன்படுத்தி வளைகுடா நாடுகளில் செவிலியர் பணிக்கு ஆட்கள் தேவைப்படுவதாக போலி ஏஜெண்ட்கள் எளிதாக அப்பாவி மக்களை ஏமாற்றிவிடுகிறார்கள். நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தகவலை சரிபார்த்த பின்னரே, மக்கள் அடுத்தகட்ட முயற்சியில் இறங்கவேண்டும்” என்றார்.
VPS ஹெல்த்கேர் நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டுத் துறையின் மூத்த அதிகாரி சஞ்சய் குமார் இதுபற்றிப் பேசுகையில்,” வேலைவாய்ப்பு நேர்காணல்களை நாங்கள் எப்போதும் மூன்றாவது நிறுவனத்திடம் ஒப்படைப்பதில்லை. எங்களுடைய மனிதவள மேம்பாட்டு துறையைச் சேர்ந்த பணியாளர்களே இதனை மேற்கொண்டுவருகின்றனர். பணிக்கு சேர்வதற்கு முன்னர் பணம் செலுத்தவேண்டும் என்ற நிபந்தனையும் எங்களது நிறுவனத்தில் இல்லை. இந்த சட்ட விரோத செயலில் ஈடுபட்டோர் மீது சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுத்த தீர்மானித்துள்ளோம்” என்றார்.
VPS ஹெல்த்கேர் நிறுவனத்தின் பெயரிலோ அல்லது அதன் கிளை நிறுவனங்களின் பெயரிலோ இதுபோன்ற போலி வேலைவாய்ப்பு தகவல் பரப்பப்பட்டால் மக்கள் info@vpshealth.com அல்லது contactus@rpm.ae என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தகவல் அனுப்பலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக LLH, மேடோர் மற்றும் புர்ஜில் மருத்துவமனைகள், புர்ஜில் மெடிக்கல் சிட்டி ஆகிய நிறுவனங்களும் இதே பிரச்சினையை சந்தித்தன என்பது குறிப்பிடத்தக்கது.
