UAE Tamil Web

அமீரகத்தில் வேலை ; நல்ல சம்பளம் – இந்தியாவைச் சேர்ந்த 300 க்கும் மேற்பட்ட செவிலியர்களின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கிய ஏஜெண்ட்..!

UAE-vaccination

கேரளாவின் எர்ணாகுளத்தில் இருக்கிறது டேக் ஆஃப் எனப்படும் டிராவல் ஏஜென்சி. அமீரகத்தில் கொரோனா தடுப்பூசி மற்றும் பரிசோதனை நிலையங்களில் செவிலியர்களுக்கு அதிகளவில் காலிப்பணியிடங்கள் இருப்பதாவும் உடனடியாக அமீரகம் சென்றால் வேலை கிடைத்துவிடும் எனக்கூறி பல செவிலியர்களின் வாழ்க்கையை பறித்திருக்கிறார்கள் இந்த மோசடி ஏஜெண்ட்கள்.

இதுவரையில் 300 க்கும் மேற்பட்ட செவிலியர்கள் இப்படி கேரளாவில் இருந்து அமீரகம் வந்து தேராவில் உள்ள தங்குமிடம் ஒன்றில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். போன வருடம் அக்டோபர் முதலே இப்படி செவிலியர்களின் வருகை கணிசமான அளவில் அதிகரித்திருக்கிறது. இதற்கான கட்டணமாக 235,000 ரூபாயை ஒவ்வொரு பெண்ணிடமும் வசூலித்திருக்கிறார்கள் கயவர்கள்.

விமான நிலையத்தில் சிம் கார்டுக்கு என 250 திர்ஹம்ஸ் பணம் வாங்கப்பட்டதாக சில பெண்கள் தெரிவிக்கின்றனர். இன்னும் சில பெண்களிடம் 25 நாட்களுக்கு உணவுக்காக 600 திர்ஹம்ஸ் வசூலிக்கப்பட்டிருக்கிறது. கணவன், குழந்தைகள் என எல்லோரையும் விட்டுவிட்டு குடும்ப சூழ்நிலை காரணமாக அமீரகம் வந்த அப்பாவிப் பெண்கள் தற்போது நிர்கதியாக உள்ளனர்.

பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவரான ரீனா ராணி தனது 3 வயது மகனை கணவனின் கவனிப்பில் விட்டுவிட்டு அமீரகம் வந்திருக்கிறார். கொல்லம் மாவட்டத்தின் பட்டாழி கிராமத்தைச் சேர்ந்த இவர் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் 9 ஆண்டுகள் செவிலியராக பணிபுரிந்திருக்கிறார். இதுகுறித்து அவர் பேசுகையில்,”இந்த வேலையில் சேர்வதற்காக கடன் வாங்கியிருக்கிறோம். என்னால் வெறுங்கையோடு ஊர் திரும்ப முடியாது. அமீரகம் வந்த முதல் 14 நாட்கள் துபாயில் உள்ள தங்கும் இடத்தில் இருந்தோம். குவாரண்டைன் செய்துகொள்ளவேண்டும் என ஏஜெண்ட்கள் கூறியிருந்ததால் நாங்களும் அமைதியாக இருந்தோம். ஆனால் அதன்பின்னரும் வேலை குறித்து அவர் (ஏஜெண்ட்) ஏதும் பேசவில்லை. ஒருநாள் தடுப்பூசி மையங்களில் பணியாளர் தேர்வு முடிந்துவிட்டது, வேறு மருத்துவமனைகளில் முயற்சி செய்வதாக அவர் தெரிவித்தார். பின்னர் அதுகுறித்தும் பேசவில்லை. எதிர்த்துக் கேள்விகேட்டபோது எங்களை அவர் மிரட்டத் தொடங்கினார். தவறான இடத்தில் சிக்கிக்கொண்டதாக உணர்ந்ததால் அந்த இடத்திலிருந்து வெளியேறிவிட்டோம்” என்றார்.

இப்படி ஒரு தங்கும் அறையில் 10 பேருக்கும் அதிகமான பெண்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். தற்போது புஜைராவில் உள்ள தனது சகோதரர் வீட்டில் ரீனா இருக்கிறார். அவருடன் அமீரகம் வந்திருக்கும் அவருடைய தோழி சூசன் சாஜி என்பவரும் அங்கேயே வசித்துவருகிறார். மற்ற பெண்கள் புஜைரா, ராஸ் அல் கைமா, உம் அல் குவைன் மற்றும் அஜ்மான் ஆகிய எமிரேட்களில் இந்த பெண்கள் ஆங்காங்கே தங்கியிருக்கிறார்கள்.

இவர்களுடைய உறவினர்கள் எர்ணாகுளத்தில் உள்ள ஏஜென்சியிடம் முறையிட்டிருக்கிறார்கள். “அவர்கள் தினந்தோறும் ஒரு காரணம் சொல்கிறார்களே தவிர ஏதும் பலன் கிடைக்கவில்லை” என சாஜி தெரிவித்தார்.

அமீரகத்தைச் சேர்ந்த தன்னார்வலர் கிரண் ரவீந்திரன் இதுபற்றிப் பேசுகையில்,” கடந்த அக்டோபர் – நவம்பர் நேரத்தில் எனக்கு பாதிக்கப்பட்ட செவிலியர்களிடம் இருந்து முதல் போன்கால் வந்தது. முன்னதாக அமீரக தடுப்பூசி மையங்களில் செவிலியர்கள் தேவை இருந்தது. ஆனால், இந்தியாவில் இவர்கள் வந்த வேளையில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டுவிட்டன. கடன்வாங்கி பெரும்தொகை செலுத்தி இவர்கள் அமீரகம் வந்திருக்கிறார்கள். ஆகவே அவர்களில் பெரும்பாலானோர் சொந்தஊர் திரும்ப விரும்பவில்லை” என்றார்.

மேலும் அவர் பேசுகையில், “அமீரக அதிகாரிகள் குறித்த பெண்களின் பயத்தை இந்த ஏஜெண்ட்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திகொண்டனர். இதனால் எளிதாக அவர்களை ஏஜெண்ட்கள் ஏமாற்றிவிடுகிறார்கள்” என்றார்.

அமீரகத்தில் தவிக்கும் இந்தியர்களுக்கு உதவுமாறு அமீரகத்தில் உள்ள இந்திய சமூக அமைப்புகளுக்கு அபுதாபியில் உள்ள இந்திய தூதரகம் மற்றும் துபாயில் உள்ள துணைத் தூதரகம் ஆகியவை வலியுறுத்தியுள்ளன. இருப்பினும் பாதிக்கப்பட்ட செவிலியர்கள் யாரும் தங்களை அணுகவில்லை என தூதரகம் மற்றும் துணைத் தூதரகங்கள் தெரிவித்துள்ளன.

பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவரான சீனா இதுகுறித்துப் பேசுகையில்,”எனக்கு 9 வயதில் ஒரு மகன் இருக்கிறான். எனது கணவரிடம் அவனை ஒப்படைத்துவிட்டு நம்பிக்கையுடன் அமீரகம் வந்தேன். டெல்லியில் உள்ள மேக்ஸ் மருத்துவமனை, மங்களூர் சிட்டி மருத்துவமனை மற்றும் சென்னையில் உள்ள NTC மருத்துவமனையில் பணியாற்றியிருக்கிறேன். எனக்கு இந்தத் துறையில் நன்கு அனுபவம் உள்ளது. அங்கே எனது வேலையை விட்டுவிட்டு இங்கே வந்தேன். இதற்காக 235,000 ரூபாயை அளித்திருக்கிறேன். அவ்வளவும் கடன். ஆகவே, என்னால் வீட்டிற்குத் திரும்பிச்செல்ல முடியாது. பாதிக்கப்பட்ட பெண்களில் சிலர் கேரளாவின் முதலமைச்சரான பினராயி விஜயன் அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளனர். எர்ணாகுளம் DGP இதுகுறித்து விசாரிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது” என்றார்.

UAE-vaccination
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap