சந்தடியில் சிந்து பாடுவது என்ற பழமொழி பெரும்பாலும் இந்த வாட்சாப் போலி தகவல் ஆசாமிகளுக்குப் பொருந்தும். பிரபல நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளைக் குறிப்பிட்டு அதன்மூலம் பணத்தைச் சுருட்ட நினைக்கும் கும்பல் சமீப காலங்களில் அதிகரித்திருக்கிறது என்றே சொல்லவேண்டும்.
அவ்வாறான போலிச் செய்திகள் குறித்து நம்முடைய UAE Tamil Web தளம் அவ்வப்போது பொது மக்களை எச்சரித்து வருகிறது. இந்நிலையில் அபுதாபி நேஷனல் ஆயில் கம்பெனி (ADNOC) தனது 50 வது ஆண்டு விழாவை முன்னிட்டு வாடிக்கையாளர்களுக்கு பல பரிசுகளை வழங்க இருப்பதாக வதந்தி வாரிசுகள் வாட்சாப்பில் கிளப்பிவிட்டிருக்கிறார்கள்.
அதாவது, ADNOC மக்களிடையே கருத்துக்கணிப்பு நடத்துவதாகவும் அதில் பங்கேற்பவர்களுக்கு 8000 திர்ஹம்ஸ்க்கும் மேற்பட்ட பரிசுகளை கிடைக்கும் என அந்த மெசேஜில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
சொல்றதே பொய்.. அதை ஏன் கொஞ்சமா சொல்ற.. ஒரு 10 லட்சம் திர்ஹம்ஸ் சொல்லலாம்ல என்றபடி அந்த மெசேஜை கடந்துவிடுங்கள். உங்களுக்கு அனுப்பும் நண்பரிடத்தும் இதைத் தெரியப்படுத்துங்கள்.
பெரும்பாலான ஆபத்தான வைரஸ்கள், ஹேக்கிங் தாக்குதல்கள் இம்மாதிரியான போலியான லிங்குகள் மூலமாக பொது வெளியில் பரப்பப்பட்டு வருவதாகவும் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் காவல்துறை தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.