UAE Tamil Web

இலவச ஷாப்பிங் கூப்பன்களை வழங்கும் லுலு நிறுவனம்.!! சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் தகவல் உண்மையா.?

lulu

ஏராளமான கிளைகளைக் கொண்ட முன்னணி ஹைப்பர் மார்க்கெட்டில் ஒன்றான லுலு குரூப்(Lulu Group), அமீரகத்தில் மிக முக்கிய ரீடெய்ல் நிறுவனமாக திகழ்கிறது.

- Advertisment -

இந்நிறுவனம் சில குறிப்பிட்ட வாடிக்கையாளர்களுக்கு இலவச ஷாப்பிங் கூப்பன்களை வழங்குவதாக சமூக ஊடகங்களில் தகவல் வெளியாகி, அந்தச்செய்தி பெரும்பாலானவர்களால் பகிரப்பட்டும் வருகிறது. இதன்படி லூலூ நிறுவனம் பெயரில் உள்ள ஒரு வெப்சைட் அந்நிறுவனம் பற்றிய நுகர்வோரின் கருத்துக்களை பதிவு செய்யும் வகையில் ஒரு கணக்கெடுப்பை கொண்டுள்ளது. அந்த கணக்கெடுப்பிற்கு பதிலளித்தவர்களுக்கு 250 யூரோ கூப்பன் வெகுமதியாக வழங்கப்படுகிறது.

ஆனால் கணக்கெடுப்பில் பதிலளித்தவர்கள் தங்களது கூப்பனை கோரும் விருப்பத்தை கிளிக் செய்யும் போது, கூப்பனை பெறுவதற்கு வாட்ஸ்அப்பில் 20 நண்பர்கள் அல்லது ஐந்து குரூப்களில் ஷேர் செய்ய வேண்டும் என்று அந்த வெப்சைட் கூறுகிறது. இந்நிலையில் இது தொடர்பாக லுலு குரூப் தங்களது நுகர்வோருக்கு முக்கிய வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளது.

அதன்படி மேற்கண்டவாறு தங்கள் நிறுவனம் சலுகை ஏதும் வழங்கவில்லை என்றும், மோசடி பிரச்சாரம் செய்து வரும் குறிப்பிட்ட போலி வெப்சைட்டை நம்பி அதன் வலையில் விழ வேண்டாம் என்று எச்சரித்துள்ளது. லுலு குரூப் இன்டர்நேஷனலின் மார்க்கெட்டிங் மற்றும் கம்யூனிகேஷன் இயக்குனரான வி.நந்தகுமார் தெரிவித்துள்ள தகவலில், பலரால் பகிரப்பட்டு வருவது மோசடி வெப்சைட் தான் என்பதை உறுதிப்படுத்தியுள்ளார். மேலும் சமூக ஊடகங்களில் பரவும் இதுபோன்ற போலி செய்திகள் மற்றும் ஸ்பேம்கள் குறித்து நுகர்வோர் எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் தகவல் தெரிவித்துள்ள நந்தகுமார், தங்கள் நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி இது போன்ற மோசடி மற்றும் போலி செய்திகள் சமூக ஊடகங்களில் பரவி வருவதை நாங்கள் கவனித்து வருகிறோம். மேலும் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளளோம். எங்கள் அதிகாரப்பூர்வ மற்றும் சரிபார்க்கப்பட்ட சமூக ஊடக கணக்குகள் மூலம் மட்டுமே நாங்கள் எங்களது நுகர்வோருக்கு அறிவிக்க வேண்டிய செய்திகளை கூறி வருகிறோம் என்றும்,எனவே மக்கள் எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் கேட்டு கொண்டுள்ளார்.