UAE Tamil Web

தனி நபர்கள் தனியார் மருத்துவமனைகள் குறித்து புகார் அளிக்க அமீரகத்தில் புதிய ஸ்மார்ட் முறை அறிமுகம்.!

ph

அமீரக சுகாதாரம் மற்றும் தடுப்பு அமைச்சகம் (MoHAP) ஒரு புதிய மின் புகார் முறையை(e-complaint system) அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் தனியார் மருத்துவமனைகளின் முறைகேடுகள் மற்றும் அதன் ஊழியர்கள் குறித்து தனி நபர்கள் புகார்களை அளிக்க முடியும். தனியார் சுகாதாரத் துறையின் கொள்கைகள் மற்றும் விதிமுறைகளுக்கு ஏற்ப மருத்துவ மற்றும் தொழில்நுட்ப பணியாளர்கள்,தாங்கள் பங்கு வகிப்பதை உறுதி செய்ய புதிய இந்த புகார் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

- Advertisment -

மேலும் தனியார் சுகாதாரப் பாதுகாப்புத் துறையில் நோயாளிகளின் புகார்களை விரைவாக தீர்க்கவும் இது உதவுகிறது. சுகாதார முறைமையின் தரத்தை மேம்படுத்துதல், ஸ்மார்ட் தீர்வுகளை புதுமைப்படுத்துதல், சேவைகளை மேம்படுத்துவதற்கான தரமான அமைப்புகளை செயல்படுத்துதல் மற்றும் சமூக உறுப்பினர்களுக்கு மகிழ்ச்சியைத் தரும் பொதுக் கொள்கைகள் மற்றும் உத்திகளை வடிவமைப்பதில் தீவிரமாக பங்கெடுப்பதற்கான MoHAP முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த புதிய புகார் முறை நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

புதிய இ-புகார் முறை மூலம் நோயாளிகள் தனியார் மருந்துவமனைகளுக்கு எதிரான தடையின்றி புகார்களை பதிவு செய்தவுடன், புகார்தாரரின் பிரச்சனை தகுதியான குழுவால் தீர்க்கப்படும் வரை, புகாரின் நிலையை(complaint status) இந்த சேவை மூலம் புகார்தாரர்கள் அறிந்து கொள்ள முடியும். துபாய் உலக வர்த்தக மையத்தில் நடைபெற்று வரும் ஜிடெக்ஸ் தொழில்நுட்ப வாரத்தில், MoHAP பங்கேற்பதன் ஒரு பகுதியாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இது பற்றிய தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ள சுகாதார மேம்பாடு மற்றும் இணக்கத் துறை இயக்குநர் டாக்டர் ஹெஸ்ஸா முபாரக், இந்த புதிய சேவை தற்போதுள்ள நடைமுறைகளுக்கு “முக்கியமான சொத்து” என்று குறிப்பிட்டுள்ளார். இது தனியார் மருத்துவமனைகள் சுகாதார இணக்கத்தை அடைய, அவற்றின் மீதான புகார்களை கையாளுவதை எளிதாக்கும்.

குடியிருப்பாளர்கள் அல்லது பார்வையாளர்கள் என யாராக இருந்தாலும், தனியார் சுகாதார நிறுவனங்களுக்கு எதிராக ஆதாரங்களுடனும் புகார் அளிக்க சமூகத்தின் அனைத்து உறுப்பினர்களையும் அனுமதிக்கிறது. மின்னணு அமைப்பு மூலம் சுகாதார அமைச்சகம் புகார்களை பெற்றவுடன், அதனை மருத்துவ பொறுப்புக் குழு என்றழைக்கப்படும் “நடுநிலைக் குழு“, விசாரிக்கும். இக்குழு ஒரு முடிவை எடுப்பதற்கு முன் இரு தரப்பினரின் நியாயத்தையும் கேட்கும். இந்த குழு சம்பந்தப்பட்ட மருத்துவர் பின்பற்றும் மருத்துவ நடைமுறைகளையும் மதிப்பீடு செய்யும்.

விசாரணைகளுக்கு பின் தகுந்த நடவடிக்கை எடுக்க மருத்துவ உரிமக் குழுவிடம் ஒரு அறிக்கை சமர்ப்பிக்கப்படும். இந்த அறிக்கையின் அடிப்படையில் புகார் மீது இறுதிக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். தரவு மற்றும் தகவல்களின் முழு ரகசியத்தன்மையையும் பராமரிக்கும் அதே வேளையில், மருத்துவ பதிவுகள் மற்றும் கோப்புகளை மின்னணு முறையில் மாற்ற, சோதனை முடிவுகளை அமைச்சகத்திற்கு மாற்றவும் புதிய புகார் அமைப்பு அனுமதிக்கும்.

வெளிப்படைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மைக்கு தரவு மற்றும் தகவலுக்கான முழு அணுகலுடன், மருத்துவ பொறுப்பு மற்றும் பயிற்சி கட்டுப்பாட்டுக் குழுக்களுடன் இணைந்து புகார்களை தீர்ப்பதற்கான நடைமுறைகளை மேம்படுத்தவும் இந்த புதிய மின் புகார் முறை உதவும் என்று டாக்டர் ஹெஸ்ஸா கூறியுள்ளார்.