UAE Tamil Web

“அமீரகத்தின் பெருமையை உலகறியச் செய்யுங்கள்” – விண்வெளிக்குச் செல்லவிருக்கும் முதல் ஏமிராட்டி பெண்..!

Matroshi

அமீரகத்திலிருந்து விண்வெளிக்குச் செல்லவிருக்கும் முதல் பெண் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார் நோரா அல் மற்றோஷி. அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவுடன் எதிர்கால விண்வெளித் திட்டத்தில் இணைந்து பணியாற்றுவதற்காக 4000 பேர் விண்ணப்பித்திருந்தனர்.

அவர்களில் இருந்து இருவர் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து அமீரகத்தின் துணைத்தலைவரும் பிரதமரும் துபாயின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில்,” நாசாவின் எதிர்கால விண்வெளித் திட்டங்களில் பணியாற்ற விண்ணப்பித்த 4000 பேரில் இருந்து இறுதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நோரா அல் மற்றோஷி மற்றும் முகமது அல் முல்லா ஆகியோருக்கு வாழ்த்துக்கள். அமீரகத்தின் முதல் பெண் விண்வெளி ஆராய்ச்சியாளராக மற்றோஷியை அறிவிக்கிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதனைக் குறிப்பிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் மற்றோஷி,”இந்த நாளை என்னால் மறக்க முடியாது. நமது மக்களின் நினைவில் என்றும் நிலைத்திருக்கும்படியாக சாதனைகள் செய்வதே என் குறிக்கோள். தொலைநோக்குப் பார்வைகொண்ட தலைமைக்கும் அமீரக விண்வெளி ஆராய்ச்சிக்குழுவிற்கும் நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார்.