UAE Tamil Web

அமீரகத்தைத் திரும்பிப் பார்க்கவைத்த 5 வயது இந்தியச் சிறுவன் – சாதனைப் புத்தகத்தில் தடம்பதித்து அசத்தல்..!

Ranesh_

துபாயில் வசித்துவரும் 5 வயதான ரனேஷ் வ்ரிஷின் புதுமையான சாதனை ஒன்றினை நிகழ்த்தியதால் அவனது பெயர் இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்-ல் இடம்பெற்றுள்ளது. துபாய் பிரைவேட் ஸ்கூலில் இரண்டாம் வகுப்புப் படித்துவரும் ரனேஷ் முழு புத்தகத்தையும் தலைகீழாகப் படித்து சாதனை நிகழ்த்தியிருக்கிறார்.

பள்ளியின் வசந்தகால விடுமுறையின் போது அவனுக்கு Tricky words yardstick என்னும் விளையாட்டை பள்ளி நிர்வாகம் அறிமுகப்படுத்தியிருக்கிறது. ஆர்வத்துடன் அதில் பங்குபெற்றுவந்த அவன் ஒருமுறை தலைகீழாக புத்தகம் வாசிப்பதை அவனது தாய் சுமித்ரா பார்த்திருக்கிறார். அவனுக்குள் ஒளிந்திருக்கும் இந்த அரிய திறமையை வெளிக்கொண்டுவர அவர் முடிவுசெய்திருக்கிறார்.

The Gingerbread Man என்னும் புத்தகத்தை தலைகீழாக வாசிக்க பயிற்சி எடுக்க ஆரம்பித்தான் ரனேஷ். நான்கு நாட்களில் நல்ல முன்னேற்றம் தெரிந்தது. சுமித்ராவும் தொடர்ந்து ஊக்கப்படுத்தவே இறுதியாக 4 நிமிடம் 21 வினாடிகளில் முழுப் புத்தகத்தையும் தலைகீழாக வாசித்து முடித்தான் சிறுவன்.

இதனை வீடியோவாக எடுத்து இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் நிறுவனத்திற்கு அனுப்பிவைத்திருக்கிறார் சுமித்ரா. ஒருவாரம் கழித்து அவரது சாதனையை நிர்வாகம் அங்கீகரித்தது மட்டுமல்லாமல் சான்றிதழ் ஒன்றினையும் அனுப்பியிருக்கிறது. படிப்பிலும் பயங்கர சுட்டியான ரனேஷ் கடந்த தேர்வில் அனைத்து பரீட்சைகளிலும் A+ வாங்கியிருப்பதாக சுமித்ரா தெரிவித்தார்.

தனது மகனை நினைத்து பெருமையாக இருப்பதாகவும் இந்தத் திறமை அவனை எத்துணை உயரத்திற்கு எடுத்துச்செல்லும் என்பதை பார்க்க ஆவலாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.