துபாயில் பறக்கும் கார் சோதனை ஓட்டம் வெற்றிக்கரமாக நிறைவு செய்யப்பட்டது.
தொழில்நுட்ப சந்தைகளில் பறக்கும் கார்களை உற்பத்திசெய்யும் முயற்சியில் பல நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றன. சில நிறுவனங்கள் அதன் சோதனை முயற்சியிலும் கூட ஈடுபட்டு வருகின்றன.
ஃபோக்ஸ்வேகன், டொயோட்டா போன்ற முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களும் பறக்கும் கார்களை உருவாக்க அதிக அளவில் முதலீடு செய்து வருகின்றன. 2030-க்குள் பறக்கும் கார்கள் பரவலான புழக்கத்துக்கு வந்துவிடும் என்று உறுதியாக கூறப்படுகிறது.
இந்நிலையில், துபாயில் ஹைப்பர் கார் உள்நகர பயன்பாட்டிற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. மணிக்கு 220கிமீ எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
லண்டனை தலைமையிடமாக கொண்ட ஸ்டார்ட்அப் நிறுவனமான பெல்வெதர் இண்டஸ்ட்ரீஸ் அதன் முழு மின்சார வோலார் eVTOL முன்மாதிரியை நவம்பர் மாதம் சோதனை செய்து முடித்தது. அப்போது ஹைப்பர்கார் மாடல் வானில் பறக்கும் காட்சிகள் வெளியாகின.
கடந்த 2 ஆண்டுகளில், குழுவானது முன்மாதிரிகளின் விமான செயல்திறனை மேம்படுத்த பல்வேறு சோதனைகளை நடத்தியது. இதில் eVTOL என்பது மின்சார செங்குத்து டேக்-ஆஃப் மற்றும் தரையிறக்கத்தைக் குறிக்கிறது.“எங்கள் வோலார் சீராக பறக்கிறது. அதே போல், எங்களின் முயற்சி புதுமையையும், தொழிற்நுட்பத்தையும் நிரூபிக்கிறது. எங்களின் வலிமையில் நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம். மேலும் தொடர்ந்து முன்னேற்றத்துடன் முழுமை பெற பாடுபடுவோம்” என்று பெல்வெதர் இண்டஸ்ட்ரீஸின் தலைமை இயக்க அதிகாரியும் இணை நிறுவனருமான கை-சே (KT) லின் கூறினார்.
40 கிமீ வேகத்தில் 13 அடி உயரத்தில் பறக்கும் சோதனை செய்யப்பட்டது. சோதனையானது, முன்மாதிரியின் நிலைத்தன்மை மற்றும் கட்டுப்பாட்டுத்தன்மையை நிரூபித்தது. தொடர்ச்சியான வளர்ச்சித் திட்டங்களின் தொடக்கமாக இது இருக்கும்” என்று பெல்வெதர் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் கூறியுள்ளது.
“நகர்ப்புறத்தில் பறக்கும் வசதி எனும் சகாப்தம் தொடங்கப்பட்டுள்ளதாக” சமூக ஊடகங்களில் பதிவிடப்பட்டுள்ளது.
பூங்கா போன்ற இடத்தில் வாகனம் புறப்பட்டு, பறந்து பத்திரமாகத் திரும்புவதை வீடியோ காட்டுகிறது. தற்போதைய முன்மாதிரியில் இரண்டு இருக்கைகள் மட்டுமே உள்ளன. ஆனால் குடும்பத்துடன் பறக்கக்கூடிய வகையில், ஐந்து இருக்கைகள் கொண்ட பறக்கும் காரை உருவாக்குவதே இதன் நோக்கம்.
பெரிய இறக்கைகள் அல்லது வெளிப்படும் கத்திகள் இல்லாத உலகின் முதல் eVTOL வோலார் என்று கூறப்படுகிறது. இது கார்களுக்கு மாற்றாக தனியார் உரிமையாளர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.இதன் முழு அளவிலான முன்மாதிரி 2023 க்குள் தயாராகி சோதிக்கப்படும்.
“அடுத்த 10 ஆண்டுகளில் மக்கள் வானத்தில் பயணம் செய்வது தவிர்க்க முடியாதது என்று நாங்கள் நம்புகிறோம். எனவே, எவரும் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் எந்தப் புள்ளிக்கும் பறக்கும் வகையில் ஒரு வோலாரை உருவாக்குகிறோம்” என்று தயாரிப்பு நிறுவனம் அதன் இணையதளத்தில் தெரிவித்துள்ளது.
துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) பறக்கும் டாக்சிகளுக்கான சட்டங்களை மறுஆய்வு செய்வதற்கான முதல் சட்ட மன்றத்தை நடத்திய ஒரு நாளுக்குப் பிறகு சோதனை விமானம் பறக்க விடப்பட்டுள்ளது.
துபாயில் பறக்கும் கார் ஆய்வு செய்யப்படுவது இது முதல் முறை அல்ல. துபாய் ஏர் ஷோ 2021-ன் போது, புளோரிடாவை தளமாகக் கொண்ட லுஃப்ட்கார், பறக்கும் காரை உருவாக்கி வருவதாகக் கூறியது.
நவம்பரில், ஆர்டிஏ சுயமாக ஓட்டும் பறக்கும் டாக்சிகள் மற்றும் ஸ்கைபாட்களை இயக்குவதாக தெரிவித்தது. ஜூலை 2020-ல், துபாய் ஆளில்லா வான்வழி வாகனங்களின் (UAV) செயல்பாடுகளை ஒழுங்குபடுத்தும் சட்டத்தை வெளியிட்டது. அதன் லட்சிய ஸ்கை டோம் திட்டமானது, துபாய் வானத்தை ஆளில்லா பறக்கும் பொருட்களால் அலங்கரித்துள்ளது.