UAE Tamil Web

அமீரகத்தின் பாதுகாப்பிற்கு இந்த இரண்டும் மிக முக்கியம் – துபாய் ஆட்சியாளரின் சமீபத்திய அறிவிப்பு..!

WAM-sheik mohammed

கொரோனாவிற்குப் பிறகான காலத்தில் நீரும் உணவும் அமீரகத்தின் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பதாக அமீரகத்தின் துணைத் தலைவரும், பிரதமரும், துபாயின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் தெரிவித்திருக்கிறார்.

கொரோனாவுக்குப் பிந்தைய நீர் மற்றும் உணவுப் பாதுகாப்பினைப் பற்றிய ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அதில் பேசிய ஷேக் முகமது,” எவ்வித சிக்கல்களையும் எதிர்கொள்ளும் வகையில் புதிய தரம்வாய்ந்த முன்னெடுப்புகளை எடுக்க திட்டமிட்டுள்ளோம். இந்த கொரோனா காலமானது பல்வேறு சிக்கல்களை அணுகுவது குறித்த விசாலமான பார்வையை எங்களுக்கு அளித்திருக்கிறது. இந்த  அனுபவத்தின் மூலமாக நீர் மற்றும் உணவுப் பாதுகாப்பினை உறுதிப்படுத்த இருக்கிறோம்” என்றார்.

அமீரக உணவுத் துறை அமைச்சரான திரு. மரியம் பின்ட் முகமது சயீத் ஹரேப் அல் முஹைரி (Mariam bint Mohammed Saeed Hareb Al Muhairi) யிடம் உணவுத் தொழில்நுட்பத்தில் தேசிய பங்கு மற்றும் முதலீடு ஆகியவற்றைத் தொடர்ந்து கண்காணிக்குமாறும், கொரோனா காரணமாக அமீரகத்தில் ஏற்பட்டிருக்கும் சிக்கல்களைத் தீர்க்கும் வகையில் சர்வதேச நிறுவனங்களோடு ஒப்பந்தங்களை மேற்கொள்ளுமாறும் ஷேக் முகமது வலியுறுத்தினார்.

“தேசத்தின் பாதுகாப்பில் நீர் மற்றும் உணவுப் பாதுகாப்பு மிக முக்கிய பங்காற்றுகிறது. தாக்குப்பிடிக்கும் பொருளாதாரத்தின் ஆணிவேர் நீர் மற்றும் உணவு ஆகியவற்றின் தன்னிறைவில் உள்ளது” என ஷேக் முகமது தெரிவித்தார்.

“ஏமிராட்டிகளின் நல அமைப்புகளை பேணிப் பாதுகாக்கும் வகையில் வளங்களை திரட்டுதல் குறித்தும் தன்னிறைவு பெறுவதற்கான வரையறைகள் மற்றும் எடுக்கவேண்டிய முயற்சிகள் குறித்தும் தேசிய அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும்” எனவும் ஷேக் முகமது குறிப்பிட்டார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமீரகத்தில் நீர் மற்றும் உணவுப் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகள் குறித்து முஹைரி பேசினார். கொரோனா காரணமாக உலகளவில் நீர் மற்றும் உணவுப் பாதுகாப்பில் ஏற்பட்டுள்ள தாக்கங்கள் குறித்தும் இந்த ஆலோசனை கூட்டத்தில் முஹைரி விளக்கினார்.

“உலகளவில் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியில் தொடர்ந்து அமீரகத்தை முன்னிலைப்படுத்த அமீரக ஆட்சியாளர்கள் முயன்று வருகிறார்கள். அமீரகத்தின் முக்கிய துறைகள் நீர் மற்றும் உணவுப் பாதுகாப்பை நம்பியே இருக்கின்றன. இவை இரண்டும் தற்சார்புப் பொருளாதாரம் மற்றும் வள மேலாண்மை ஆகியவற்றிற்கு அடித்தளமாகும். உணவு மற்றும் நீர் துறையில் எதிர்கால தலைமுறையினரின் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் உள்நாட்டு மற்றும் சர்வதேச நிறுவனங்களுடன் இணைந்து இயங்க இருக்கிறோம். எதிர்காலத்திற்கு நாம் தயாராக இருப்பதையும், உலகளவில் நம்முடைய நிலையை உறுதிப்படுத்தவும் இத்தகைய நடவடிக்கைகள் அவசியமாகும்” என முஹைரி தெரிவித்தார்.

இந்த கூட்டத்தில் துபாயின் பட்டத்து இளவரசரும், நிர்வாக சபையின் தலைவருமான ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் (Sheikh Hamdan bin Mohammed bin Rashid Al Maktoum), துணைப் பிரதமர் மற்றும் ஜனாதிபதி விவகாரத்துறை அமைச்சருமான ஷேக் மன்சூர் பின் சயீத் அல் நஹ்யான் (Sheikh Mansour bin Zayed Al Nahyan) ஆகியோரும் உடனிருந்தனர்.