துபாயின் சூக் அல் மர்ஃபா பகுதியில் ஒரு புதிய மரைன் ஸ்டேஷன் திறக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிக்கு வரும் பார்வையாளர்கள் அப்ரா போட்டில், 5 மாதங்களுக்கு இலவசமாக பயணம் செல்லலாம் என்று சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையமான (RTA) தெரிவித்துள்ளது.
துபாய் சூக் அல் மர்ஃபாவிற்கு 2 கடல் வழிகள் அமைக்கப்பட்டுள்ளது. அதன் ஒரு வழி துபாயின் ஓல்ட் சூக் என்று அழைக்கப்படும் தேராவின் பழைய சூக் ஆகும். இந்த வழியில் இயங்கவுள்ள 25 நிமிட படகு பயணம், வார நாட்களில் மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரையிலும், வார இறுதி நாட்களில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு காலை 10 மணி முதல் 12 மணி வரை மற்றும் மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் பயன்பாட்டில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சூக் அல் மர்ஃபாவிற்கு செல்லும் 2வது வழி அல் குபைபாவிலிருந்து இயக்கப்படும். இந்த வழியில் இயங்கவுள்ள 20 நிமிட பயணம், வார இறுதி நாட்களில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு மட்டும் மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை பயன்பாட்டில் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த கடல் வழி போக்குவரத்து குறித்து RTA வின் பொதுப் போக்குவரத்து ஏஜென்சியின் தலைமைச் செயல் அதிகாரி அஹ்மத் பஹ்ரோசிஅன் கூறுகையில், “இந்த போக்குவரத்து முறையானது சூக் அல் மர்ஃபாவை எளிதான மற்றும் தடையற்ற வழியில் அணுகுவதற்கான ஒரு அற்புதமான புதிய வழியாகும்” என்று தெரிவித்துள்ளார்.
சூக் அல் மர்ஃபாவின் பொது மேலாளர் முஆத் அப்துல் காதர் கூறுகையில், “புதிய அப்ரா மற்றும் ஃபெர்ரி படகு சேவையானது, எங்களது புதிய விற்பனை இலக்கை அடையவும் மற்றும் பார்வையாளர்களுக்கு மறக்க முடியாத காட்சிகளை வெளிகாட்டவும் வழிவகுக்கும்” என்று கூறினார்.