27.8 C
Dubai
October 22, 2020
UAE Tamil Web

அமீரகத்தில் வேலையிழந்த இந்தியர் நாடு திரும்ப இலவச விமான டிக்கெட்!

uae-indian-expats,-chennai-flights,-coronavirus,-covid19,-mission-vande-bharat

அமீரகத்தில் வேலையிழந்து, பொருளாதார நெருக்கடி காரணமாக நாடு திரும்ப முடியாமல் தவிக்கும் இந்தியர்களுக்கு உதவி செய்ய அமீரக வாழ் தொழிலதிபர்கள் மற்றும் மானுடவியலாளர்கள் கரம் கோர்த்திருப்பது மக்களிடயே பெருமகிழ்ச்சியை உண்டாக்கியிருக்கிறது. இதன்மூலமாக தாயகம் திரும்ப இலவச விமான டிக்கெட்டுகளை வழங்க பலரும் முன்வந்திருக்கிறார்கள்.

இந்திய அரசு இயக்கிவரும் அமீரகம் – இந்தியா இடையிலான விமானப் போக்குவரத்திற்கான கட்டணமாக 700 முதல் 750 திர்ஹம் வரை மக்களிடையே வசூலிக்கப்படுகிறது. செல்லும் இடத்தைப் பொறுத்து இந்தக் கட்டண வேறுபாடு  நிர்ணயிக்கப்படுகிறது. கொரோனோ பாதிப்பு காரணமாக வேலையை இழந்தவர்கள் இந்த விமானக் கட்டணத்தை செலுத்த முடியாத அளவிற்கு நலிவடைந்துள்ளார்கள். மேலும் மருத்துவ சிகிச்சை பெற்றுவரும் பலரும் இந்தியா திரும்ப முடியாமல் தவிக்கிறார்கள்.

இப்படியான மக்களின் இடர்களைக் களையும் நோக்கில் கேரளாவில் இயங்கிவரும் மலையாளம் கம்யுனிகேசன் லிமிடட் (Malayalam Communications Ltd) என்னும் நிறுவனம் 1000 பேருக்கு இலவச விமான டிக்கெட் வழங்கப்படும் என அறிவித்திருக்கிறது. கைராளி டிவி சேனல் (Kairali TV) மற்றும் கைராளி செய்தி சேனலை (Kairali News) இந்நிறுவனம் நிர்வகித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிறுவனம் வழங்கும் இலவச விமான டிக்கெட்டைப் பெற விண்ணப்பிக்க விரும்புவோர் [email protected] என்னும் இணைய முகவரியைப் பயன்படுத்தலாம்.

indian-repatriation
Image Credit :gulfnews

இதேபோல் இந்தியாவைச் சேர்ந்த தொழிலதிபரும், அல் ஆதில் வர்த்தக நிறுவனத்தின் (Al Adil Trading Company) தலைவருமான தனஞ்செய் தட்டார் (Dhananjay Datar) 300 டிக்கெட்களை இலவசமாக கொடுக்க முன்வந்துள்ளார். இதற்காக இந்திய துணைத் தூதரக தலைமை அதிகாரியிடம் பயணிகளின் பட்டியலை கோரியுள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும்,” நம்முடைய மக்களுக்கு உதவ இதைவிடச் சிறந்த சந்தர்ப்பம் வாய்க்காது” என்றார். அதுமட்டுமல்லாமல் அமீரகத்திலிருந்து நாடு திரும்பும் இந்தியர்களின் கொரோனோ பரிசோதனைக்கு ஆகும் செலவையும் ஏற்பதாக அறிவித்துள்ளார்.

“இந்தியர்களை தாயகம் அழைத்துச் செல்ல இந்திய அரசு எடுத்திருக்கும் இந்நடவடிக்கை மிகப்பெரிய முன்னெடுப்பாகும். விமானக் கட்டணங்களை செலுத்த முடியாமல், கொரோனோ பரிசோதனை செய்ய பணமில்லாமல் தவிக்கும் மக்களுக்கு உதவி செய்ய நினைத்தேன். மேலும் உதவிசெய்ய முன்வரும் நிறுவனங்களுக்கு நான் வழிகாட்டி வருகிறேன்” என தட்டார் தெரிவித்தார்.

அமீரகத்தில் இயங்கிவரும் அரசு சாரா தொண்டு நிறுவனமான ப்ரவசி இந்தியா ஃபோரம் (Pravasi India Forum) 100 இலவச டிக்கெட்களை அளிக்க முன்வந்துள்ளது. திங்கட்கிழமை முதல் இவ்விமான டிக்கெட்களைப் பெற விண்ணப்பங்கள் வழங்கப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. “இந்திய துணைத் தூதரக தலைமை அதிகாரி அளிக்கும் பொருளாதார நெருக்கடியில் இருப்பவர்களின் பட்டியலில் உள்ளோருக்கு இந்த டிக்கெட்கள் வழங்கப்படும்” என அந்நிறுவன தலைவரான அபுலேயிஸ் (Abulaise) தெரிவித்தார்.

Incas UAE குழுமத்தின் செயல் துறைத் தலைவரான புன்னகன் முகமது அலி (Punnakan Mohammed Ali) இதுகுறித்து பேசுகையில், ” இந்திய துணைத் தூதரகம் பட்டியலிடும் பணப் பற்றாக்குறையால் வாடும் மக்களுக்கு இலவசமாக 100 டிக்கெட்களை வழங்க இருக்கிறோம்” என்றார்.

இலவச விமான டிக்கெட் பெற விண்ணப்பிக்க மக்கள் www.pravasiwelfareforum.com. இணைய முகவரியை நாடலாம். அல்லது 055-1025611 என்ற எண்ணிற்கு அழைத்து உதவிகளைப் பெறலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 error: Alert: Content is protected !!