UAE Tamil Web

அமீரகத்தில் வெள்ளிக்கிழமை சிறப்பு தொழுகைக்கு மீண்டும் அனுமதி.! NCEMA அறிவிப்பு

mosque

அமீரகத்தில் வெள்ளிக்கிழமை சிறப்பு தொழுகை வரும் டிசம்பர் 4-ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்குகிறது.

- Advertisment -

இது தொடர்பாக அறிவிப்பு வெளியிட்டுள்ள தேசிய அவசர நெருக்கடி மற்றும் பேரழிவுகள் மேலாண்மை ஆணையம்(NCEMA), அமீரகத்தில் உள்ள மசூதிகள் வரும் டிசம்பர் 4 முதல் வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகையை நடத்தும் என்று அறிவித்துள்ளது. கோவிட்-19 தொற்று பரவலை கட்டுப்படுத்த சில மாதங்கள் மூடப்பட்டிருந்த அமீரக மசூதிகளில், குறைக்கப்பட்ட திறனுடன் கடந்த ஜூலை 1 முதல் கூட்டு தொழுகை மீண்டும் தொடங்கியது.

எனினும் வெள்ளிக்கிழமை தொழுகை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அமீரக மசூதிகளில் வெள்ளிக்கிழமை தொழுகை மீண்டும் தொடங்க உள்ள நிலையில்,தொற்றுக்கு எதிரான கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் மசூதிகள் 30% திறனுடன் இந்த தொழுகையை நடத்தலாம் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

குத்பாவிற்கு 30 நிமிடங்களுக்கு முன் மசூதிகள் திறக்கப்படும் என்றும் தொழுகைக்கு 30 நிமிடங்கள் கழித்து மூடப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. குத்பாவும், தொழுகையும் சேர்த்து மொத்தம் 10 நிமிடங்கள் நீடிக்கும்.

மற்ற அனைத்து தொழுகையின் போது தொழுகைக்கு 15 நிமிடங்களுக்கு முன்பு மசூதிகள் திறக்கப்படும் என்றும், மஹ்ரிப் தொழுகையின் போது மட்டும் 5 நிமிடங்களுக்கு முன்பு மசூதிகள் திறக்கப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மசூதிக்கு வருபவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிவதோடு, தொழுகைக்கு தங்கள் சொந்த முஸல்லாவை கொண்டு வர வேண்டும். வழிபாட்டிற்கு வருவோர் தங்களது சொந்த புனித குர்ஆன் நகல்களை கொண்டு வர வேண்டும். முக்கியமாக முதியவர்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்கள் மசூதிகளுக்கு செல்வதை தவிர்த்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.