UAE Tamil Web

அமீரகத்தில் விரைவில் வரும் 5 நாள் தொடர் விடுமுறை.! திடீரென விதிக்கப்பட்ட தடையால் மக்கள் ஏமாற்றம்..

camp

அமீரகத்தில் டிசம்பர் துவக்கத்தில் 5 நாள் தொடர் விடுமுறை வர உள்ளதால் எமிராட்டிகள், குடியிருப்பாளர்கள், பார்வையாளர்கள் என பல தரப்பினரும் தங்களது விடுமுறையை உற்சாகமாக கழிக்க பல பிளான்களை போட்டு வைத்து காத்திருக்கின்றனர்.

- Advertisment -

இந்நிலையில் ராஸ் அல் கைமாவை தொடர்ந்து புஜைராவில் உள்ள அவசர நெருக்கடி மற்றும் பேரிடர் குழு கூடாரங்கள் அமைத்து தங்கும் கேம்ப்கள், கேரவன் கேம்ப்கள் உட்பட அனைத்து வகையான கேம்ப்புகளுக்கும் தடை விதித்துள்ளது. தொற்றுநோய் பரவாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவிட் -19 தொற்றிலிருந்து குடியிருப்பாளர்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க தங்கள் எமிரேட் எடுத்து வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்த தடை அறிவிக்கப்பட்டுள்ளதாக புஜைரா காவல்துறையின் தளபதி மேஜர் ஜெனரல் முகமது அஹ்மத் பின் கானேம் அல் காபி குறிப்பிட்டுள்ளார். புஜைராவின் அழகிய இடங்கள் குறிப்பாக குளிர்காலத்தில் முகாம்கள் அமைத்து புதிய கிளைமேட் அனுபவத்தை பெற நாடு முழுவதும் உள்ள ஆர்வலர்களை ஈர்க்கின்றன.

camp1

அடுத்த மாத துவக்கத்திலேயே அமீரகத்தில் 5 நாட்கள் தொடர் விடுமுறை வர உள்ள நிலையில், குடியிருப்பாளர்கள் மற்றும் இளைஞர்களின் கேம்ப் அமைத்து தங்கும் திட்டங்கள் நிச்சயம் தொற்று எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு பாதிப்புகளை ஏற்படுத்திவிடும் என்று கூறினார். மேலும் இந்த தடை தொடர்பாக தேவையான கள பிரச்சாரங்கள் புஜைரா காவல்துறை மற்றும் குடிமை அமைப்புகளால் நடத்தப்படும் என்றும், தடையை மீறி முகாம்கள் அமைத்தால் அதனை அதிகாரிகள் அகற்றி ,பொது நலனுக்கான முடிவுக்கு இணங்காதவர்களுக்கு கடுமையான அபாரதங்கள் விதிப்பார்கள் என்றும் எச்சரித்துள்ளார்.

தடை பற்றி மக்களின் கருத்து..

நண்பர்களுடன் முகாமிட்டு தங்க திட்டமிட்டிருந்த எமிராட்டியான அப்துல்லா சலேஹ் என்பவர் தடை பற்றி பேசும்போது “நாங்கள் புதிய விதியைப் பின்பற்ற வேண்டும், இது பொது சுகாதாரத்தை உறுதி செய்வதற்கும் கோவிட் -19 இலிருந்து நம்மைப் பாதுகாப்பதற்கும் விதிக்கப்பட்டுள்ள தடை அதாவது நமது நலனுக்காக விதிக்கப்பட்டுள்ள தடையே”என்றார்.

மற்றொரு எமிராட்டியான இப்ராஹிம் என்பவர், ‘கேம்ப் போட்டு நல்ல வானிலையை அனுபவிக்க முடியாமல் போனது வருத்தமாக உள்ளது. இருப்பினும், இந்த நடவடிக்கை உண்மையில் மக்களை நலனுக்காகவே என்பதை நான் புரிந்துகொள்கிறேன், எனவே அனைவரும் இதை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்’ என்றார்.

கேம்ப் அமைக்க விதிக்கப்பட்ட தடை பலருக்கு ஏமாற்றம் தந்திருந்தாலும் கோவிட் -19 பரவுவதிலிருந்து அமீரகத்தை பாதுகாப்பது ஒவ்வொரு எமிராட்டி, குடியிருப்பாளர், பார்வையாளர் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் பொறுப்பு என்பதை பலரும் உணர்ந்துள்ளனர்.