புஜைரா: 21 வயதான ஏமிராட்டி இளைஞர் ஒருவர் ஓட்டிச்சென்ற கார் கனரக டிரக் ஒன்றின்மீது மோதியதால் நிகழ்ந்த விபத்தில் இளைஞர் உடல்நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். டிரக் ஓட்டுனர் லேசான காயங்களுடன் உயிர் பிழைத்ததாக காவல்துறையினர் தெரிவித்திருக்கின்றனர்.
புஜைராவின் சராம் பகுதியில் அல் தைவான் சாலையில் இந்த விபத்து நிகழ்ந்திருக்கிறது. கனரக டிரக் மோதியதால் நசுங்கிய காருக்குள் இளைஞர் சிக்கிக்கொண்டார். வேறுவழியின்றி, காரை ஹைட்ராலிக் வெட்டும் இயந்திரம் மூலமாக பிளந்து இளைஞரின் உடலை வெளியே எடுத்தனர் அதிகாரிகள்.
இதுகுறித்துப் பேசிய புஜைரா போக்குவரத்து மற்றும் ரோந்துத் துறையின் தலைமை இயக்குனர் சலே முகமது அப்துல்லா அல் தன்ஹாணி (Saleh Mohammad Abdullah Al Dhanhani),” இந்த விபத்துக் குறித்து மாலை 5.30 மணிக்கு எங்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அல் தைவான் சாலையில் நிகழ்ந்த இந்த விபத்தில் சிலருக்கு காயம் ஏற்பட்டிருப்பதாக எங்களிடம் தெரிவித்தார்கள். தேசிய ஆம்புலன்ஸ் குழுவினர் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அதிகாரிகள் இந்த விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்” என்றார்.
இதனிடையே நசுங்கிய காரிலிருந்து இளைஞரின் உடலை காவல்துறையினர் வெளியே எடுக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. வாகனவோட்டிகள் சாலை விதிகளைப் பின்பற்றுமாறும், உட்புற சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகளில் செல்ல வேண்டிய வேகத்தினை அறிந்து வாகனங்களை இயக்குமாறும் காவல்துறை வாகனவோட்டிகளை அறிவுறுத்தியிருக்கிறது.