துபாய் கார்டன் க்ளோ- திரும்பும் பக்கமெல்லாம் வானுயர்ந்த கட்டிடங்கள், சாலை நிறைந்த போக்குவரத்து, மின்னல் வேகத்தில் போகும் வாகனங்கள் என்று எப்பொழுதும் சுறுசுறுப்பாக இயங்கி கொண்டிருக்கும் துபாய் நகரத்தின் நடுவே பல வண்ணங்களுடன் ஒளிரும் ஒரு பொழுதுபோக்கு தான் இந்த தீம் பார்க்.
இதன் பளபளப்பு, பிரமாண்டம், தனித்துவம், வித்தியாசமான பெரிய படைப்புகள், வண்ண வண்ண விளக்குகள், நேரடி இசை மற்றும் ஈர்ப்புகள் ஆகியவை அயராது உழைத்து சோர்வடைந்த மனிதனின் ஹார்மோன்களைத் தூண்டுகின்றன.
ஜபீல் பூங்காவில் அமைந்துள்ள பளபளப்பான இந்த தீம் பார்க், 40 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்திருக்கும், உலகின் சிறந்த அறிவான படைப்பு மற்றும் தொழில்நுட்ப திறன்களுக்கான ஒரு சான்றாகும். தனியார்-பொதுத்துறை ஒத்துழைப்பால் நடத்தப்பட்டுவரும் இந்த பார்க்கானது, 2015 ஆம் ஆண்டில் திறக்கப்பட்டது. ஒவ்வொரு வருடமும் கோடை காலத்தில் பூங்கா மூடப்பட்டு, அக்டோபரில் மீண்டும் திறக்கப்படும். பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் இந்த பூங்கா புதுமை மற்றும் படைப்பாற்றலுடன் புதுப்பொலிவு பெற்று வருகிறது.
கார்டெனின் சிறப்பம்சங்கள்:
துபாய் கார்டன் க்ளோ பகலில் ஒரு கலை அரங்கில் இருந்து இரவில் ஒளிரும் தோட்டமாக மாறி பார்வையாளர்களை கவர்கிறது. இந்த கார்டெனில் 10 மில்லியனிற்கும் மேற்பட்ட அதிக ஆற்றல் திறன் கொண்ட பல்புகள் மற்றும் மறுசுழற்சி செய்யப்பட்ட ஒளிரும் பொருட்கள், வனவிலங்குகள் மற்றும் இயற்கை நிலப்பரப்புகளின் அழகிய பிரதிபலிப்பை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.
ஐஸ் பார்க், டைனோசர் பார்க், ஆர்ட் பார்க் மற்றும் தி க்ளோ பார்க் ஆகியவை துபாய் க்ளோ கார்டெனின் ஈர்ப்புகளில் எப்போதும் முன்னிலை வகிக்கின்றன. அதுமட்டுமின்றி ஃப்ளவர் வாலி (Flower wally), கலர்ஃபுல் வேர்ல்ட் (Colorful World), ஒளிரும் சஃபாரி (Glowing Safari), ஹேப்பி ஃபாரஸ்ட் (Happy Forest) போன்ற இடங்கள் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்த வரிசைகட்டி காத்து இருக்கின்றன. இவற்றைப்பற்றி சற்று விரிவாக காணலாம் வாங்க.!
பனி பூங்கா (ICE PARK):
துபாய் க்ளோ கார்டெனின் பளபளக்கும் ஈர்ப்புகளில் இது முக்கியமான ஒன்றாகும். வெப்பமண்டல பாலைவன பூமியான அமீரகத்தில் இப்படிப்பட்ட உறைபனியை அனுபவிக்க பார்வையாளர்கள் மிகவும் விரும்புகிறார்கள். மேலும் அவர்களுக்கு இது ஒரு கற்பனை செய்ய முடியாத அனுபவத்தை வழங்குவதாக கூறுகிறார்கள்.
இப்படிப்பட்ட உறையவைக்கும் -7° குளிரில் பார்வையாளர்களுக்கு என தனிப்பட்ட வெப்ப ஜாக்கெட் அளிக்கப்படுகிறது. உலகம் முழுவதிலுமிருந்து 150 உயர் திறமையான கலைஞர்களின் சிந்தனையால், 5000 டன் திட பனியைப் பயன்படுத்தி இந்த ஐஸ் பார்க் உருவாக்கப்பட்டுள்ளது. புர்ஜ் கலீஃபா, புர்ஜ் அல் அரப், ஐஸ் ஏஜ் (ICE AGE) திரைப்பட கதாபாத்திரங்கள் மற்றும் மினி துபாய் (MINI DUBAI) ஆகியவற்றின் பனிப்பாறை கட்டமைப்புகள் இந்த ஐஸ் பூங்காவின் கூடுதல் ஈர்ப்புகளாகும்.
டைனோசர் பார்க்:
பொதுவாகவே டைனோசர்கள் என்றாலே அனைவரும் ஆர்வமுடன் பார்க்கக்கூடிய ஒரு அழிந்த உயிரினமாக கருதப்படுகிறது. துபாய் கார்டன் க்ளோவில் அப்படிப்பட்ட அழிந்த உயிரனத்தைப்பற்றி அறிந்துகொள்ள பார்வையாளர்களை அழைத்துச் செல்வதற்காக மிக அற்புதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
அதாவது டைரனோசொரஸ் ரெக்ஸ், வெலோசிராப்டர்ஸ் போன்ற கொடிய வேட்டையாடும் டைனோசர்கள் வாழ்ந்த காலமான மெசோசோயிக் சகாப்தத்தின் வரலாற்றுக்கு முந்தைய காலத்திற்கு இந்த பூங்கா பார்வையாளர்களை அழைத்துச்செல்கிறது. மேலும் டைனோசர்களை பற்றி கூடுதல் தகவல் அறிந்துகொள்ள விரும்புபவர்களுக்காக டைனோசர் ஆய்வகமும் டைனோசர் அருங்காட்சியகமும் இந்த துபாய் கார்டன் க்ளோவில் உள்ளது.
ஆர்ட் பார்க்:
உலகம் முழுவதும் இருந்து வரவழைக்கப்பட்ட 200 விடாமுயற்சியுள்ள, மிகுந்த படைப்பாற்றல் மிக்க கலைஞர்களால் 60 நாட்களில் உருவாக்கப்பட்ட கலைப்படைப்பு இதுவாகும். 500,000 மறுபயன்பாட்டுப் பொருட்களான (Reusable Products) பீங்கான், கண்ணாடி, பிளாஸ்டிக் உணவுகள், பாட்டில்கள் மற்றும் எண்ணற்ற CD-களால் உருவாக்கப்பட்ட இந்த ஆர்ட் பார்க் நிச்சயமாக விடுமுறைக்கு வருபவர்களை மயக்க தவறுவதில்லை. இப்படிப்பட்ட பொருட்களால் வடிவமைக்கப்பட்ட உயிரினங்களின் மாதிரிகள் காண்போரை வெகுவாக கவர்கிறது.
தி க்ளோ பார்க்:
துபாய் க்ளோ கார்டெனிலுள்ள இந்த இருண்ட மிகப்பெரிய பளபளப்பான தீம் பார்க் தான் 500 க்கும் மேற்பட்ட பொறியாளர்கள், கட்டிடக் கலைஞர்கள் மற்றும் திறமையான கைவினைஞர்களால் உருவாக்கப்பட்ட ஒரு தலைசிறந்த படைப்பாகும். இங்கே இருக்கும் மில்லியன் கணக்கான ஆற்றல் சேமிப்பு ஒளி விளக்குகள் மற்றும் ஒளிரும் சுற்றுச்சூழல் பொருட்களால் செய்யப்பட்ட பல வடிவங்கள் நிச்சயமாக பார்வையாளர்களுக்கு ஒரு விருந்தாக அமைகிறது.
ஃப்ளவர் வாலி (FLOWER WALLY):
பிரம்மாண்டமான பல வண்ண விளக்குகள், ஒளிரும் வனவிலங்கு சிற்பங்கள் மற்றும் இயற்கையையும் அதன் நிலப்பரப்பையும் பிரதிபலிக்கும் அற்புதமாக வடிவமைக்கப்பட்ட கட்டமைப்புகள் இந்த பார்க்கிற்கு இரவில் மக்களை வியக்க வைக்கின்றன.
க்ளோவிங் சஃபாரி (GLOWING SAFARI):
மினுமினுக்கும் வனவிலங்கு வாழ்க்கைக்கு (வனவிலங்கு உருவங்கள்) மெல்லிசையுடன் பார்வையாளர்களை கூட்டிச்செல்கிறது இந்த சஃபாரி.
இது தவிர ஹாப்பி பாரஸ்ட் (Happy Forest), மை துபாய் (My Dubai), கலர்ஃபுல் வேர்ல்ட் (Colorful World) என்பன போன்ற மேலும் சில ஈர்ப்புகளும் உங்களைக் கவர துபாய் கார்டன் க்ளோவில் தயார் நிலையில் உள்ளன.
இடம்:
ஜபீல் பார்க், கேட் எண் – 6 & 7, பகுதி-பி (AREA-B), துபாய்.
பார்வை நேரம்:
சனிக்கிழமைகளில் இருந்து புதன் கிழமைகள் வரை: மாலை 4:00 மணி முதல் 12:00 வரை.
வியாழன், வெள்ளி & பொது விடுமுறை நாட்களில்: மாலை 4:00 மணி முதல் 1:00 வரை.
டிக்கெட் விலை: ஒரு நபருக்கு – 53 திர்ஹம்ஸ்
குறிப்பு: துபாய் கார்டன் க்ளோவுக்கான நுழைவு டிக்கெட், ஐஸ் பார்க் நுழைவு கட்டணத்தை உள்ளடக்காது.
ஐஸ் பார்க் டிக்கெட் விலை: 60 முதல் 65 திர்ஹம்ஸ்
பார்வையாளர்களுக்கு சில டிப்ஸ்:
- துபாய் கார்டன் க்ளோவிற்குள் நுழைய பார்வையாளர்கள் செல்லுபடியாகும் ஏதேனும் புகைப்பட அடையாள அட்டையை வைத்திருக்க வேண்டும்.
- பூங்காவிற்குள் விலங்குகள் மற்றும் செல்லப்பிராணிகளை கொண்டுசெல்ல அனுமதி இல்லை.
- பார்வையாளர்கள் துபாய் கார்டன் க்ளோவில் மரியாதைக்குரிய உடையை அணியுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். எந்தவொரு பார்வையாளரும் பொருத்தமற்ற உடையை அணிந்தால் அவர்களின் அனுமதியை மறுக்க நிர்வாகத்திற்கு உரிமை உண்டு.
- துபாய் கார்டன் க்ளோவிற்குள் புகைபிடித்தல் தடைசெய்யப்பட்டுள்ளது.
- வெளி உணவுகள் மற்றும் பானங்களை பார்க்கிற்குள் எடுத்துச்செல்ல அனுமதி இல்லை.
- ஜபீல் பூங்காவில் பார்க்கிங் வசதி உள்ளது.
