கொரோனா தொற்று நோயைத் தொடர்ந்து 2 வருட இடைவெளிக்குப் பிறகு சர்வதேச விமானங்களில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை ஞாயிற்றுக்கிழமை முதல் தளர்த்த இருப்பதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது.
விமானத்தின் கேபின் குழு உறுப்பினர்கள் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணக் கருவிகளை அணியத் தேவையில்லை, அதே நேரத்தில் விமான நிலையங்களில் பணியாளர்கள் விருப்பினால் பாதுகாப்பு கருவிகளை அணிந்துக் கொள்ளலாம் என்று இந்திய அரசு அறிவித்துள்ளது.
மருத்துவ அவசர நிலைகளுக்காக சர்வதேச விமானங்களில் 3 இருக்கைகளை விமான நிறுவனங்கள் காலியாக வைத்திருக்க தேவையில்லை. இந்தியாவில் அதிகளவிலான மக்கள் தடுப்பூசி செலுத்தி வருவதாலும், கோவிட் நோய்த் தொற்றுகள் தொடர்ந்து குறைந்து வருவதாலும் இத்தகைய விதிகள் தளர்த்தப்பட்டுள்ளன.
பாதுகாப்புக்காக முகக்கவசம் மற்றும் சானிடைசர்களை விமான நிலையங்களிலும் விமானங்களிலும் பயன்படுத்தலாம். மேலும் பயணிகள் மற்றும் பணியாளர்கள் பாதுகாப்பு பொருட்கள், சானிடைசர்கள் மற்றும் N-95 முகக்கவ எடுத்துச் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கொரோனா நெருக்கடியைத் தொடர்ந்து மார்ச் 23, 2020 அன்று சர்வதேச பயணிகள் விமானங்களை இந்தியா நிறுத்தியது. பின்னர் ஜூலை 2020 முதல் 45 நாடுகளுடன் ஏர் பபிள் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு சர்வதேச பயணத்தை தொடர்ந்தது.
இதனையடுத்து கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் விமான நிறுவனங்கள் முழு உள்நாட்டு சேவைகளை இயக்க அனுமதித்தது. அதிலிருந்து பிப்ரவரி வரை ஏறக்குறைய 7.7 மில்லியன் உள்நாட்டு பயணிகள் பயணம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.